Friday, March 11, 2011

அறப்போரும் அதன் வழிமுறைகளும்


2782. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.
Volume :3 Book :56
2783. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஜிஹாத் (இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :56
2784. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :56
2785. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார்.
"அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்" என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :3 Book :56
2786. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
Volume :3 Book :56
2787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் - (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :56

0 comments:

Post a Comment