Tuesday, March 1, 2011

தொலைந்து போன வருடங்கள்!!


கல்லூரியை முடித்து விட்டு வேலையை தேடிக்கொண்டிருந்த நாட்கள். நண்பர்களுடன் ஒன்றாக இருந்து பத்திரிகைகளை புரட்டுவதும் இண்டர்வியூக்கு செல்வதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. வேலை இன்றி திரும்பும் நண்பனை வாஞ்சையுடன் வரவேற்பதும் வேலை கிடைத்தவை 'உன்னைய சங்கத்துல இருந்து நீக்கிட்டோம்' என்றும் கூறியும் நகர்ந்து கொண்டிருந்தன நாட்கள்.

என்ன தான் சிரித்து பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் கழிந்து செல்லச் செல்ல வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்தோம். சிலருக்கு வேலை உடனே கிடைத்தது. சிலருக்கு பல மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்தது. எப்படியோ எல்லோருக்கும் வேலை கிடைத்தது, சம்பளமும் கிடைத்தது.

சில வருடங்கள் முன் நடைபெற்ற இந்த சம்பவங்கள் சில தினங்களுக்கு முன் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கிய போது மீண்டும் மனதில் வந்தன. குற்றம் சாட்டப்பட்ட 94 நபர்களில் 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு இந்த நீதிமன்றம் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகள்!!
அன்று சில மாதங்கள் சும்மா இருப்பதையே வாழ்க்கையை தொலைத்து கொள்வதாக நினைத்தோமே... ஆனால் இவர்கள் தொலைத்ததோ ஒன்பது வருடங்கள். எவ்வித குற்றமும் செய்யாமல் ஒன்பது ஆண்டுகள் இந்த அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சிறையில் கிடைக்கும் சொகுசுகளா இவர்களுக்கு வழங்கப்பட்டது? சித்திரவதைகளும் நிந்தனைகளும்தான் இவர்களை ஒன்பது ஆண்டுகள் வாட்டி வதைத்தன.

அதிலும் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் இன்னும் கனத்தது. சில நாட்கள் வேலையும் சம்பளமும் இல்லாமல் இருந்தாலே என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.

பெற்றோர்களின் சம்பாத்தியமும் ஆதரவும் இருந்ததால் அன்று நாங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போதும் சாப்பாட்டிற்கு பிரச்சனையில்லை. ஆனால் இவர்களின் நிலை?? பலரும் தினக்கூலிகள். சம்பாத்தியம் இருந்தால் அன்று வீட்டில் அடுப்பெரியும். குடும்பத்தின் ஆண் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தால் அக்குடும்பத்தின் நிலை என்னவாக இருக்கும்?

மனக்கஷ்டம் ஒரு புறம் என்றால், மற்றொரும் புறம் பொருளாதார சிக்கல். உண்மையில் சிக்கித்தான் போனார்கள் இந்த குடும்பத்தின் பெண்மணிகள். சாப்பாட்டிற்கே வழி இல்லை எனும் பொழுது குழந்தைகளுக்கு எங்கிருந்து கல்வி வழங்குவது? குடும்பத்தின் சுமையை ஏற்ற இவர்கள் வீட்டு வேலைகளை செய்து சொற்பமாக சம்பாதித்து குடும்பத்தை நடத்தினர்.

மகன் அநியாயமாக சிறையில் இருக்கும் ஏக்கத்தில் உயிரை விட்டனர் சில தந்தைமார்கள். எல்லாம் கடந்து தற்போது ஒன்பது வருடங்களுக்க பிறகு நிரபராதி என்ற அறிவிப்பு!

இது ஏதோ குஜராத்தில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. தமிழக சிறைகளில் பதிமூன்று வருடங்களாக இருக்கும் அப்பாவிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'நாங்கள்தான் குண்டு வைத்தோம்' என்று அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய போதும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்யுக்தா எக்ஸ்பிரஸ் மற்றும் அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் கண்ணீர் கதைகள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இழந்த இவர்களின் ஒன்பது வருடங்களை இவர்களுக்கு திரும்ப கொடுக்கப்போவது யார்?

இந்த அப்பாவிகளைக் கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இவர்கள் குடியிருக்க வாடகை வீடு வழங்கப்போவது யார்?

இவர்களுக்கு இனி வேலை கொடுக்கப் போவது யார்?

சொந்த தொழில் செய்தாலும் இவர்களுடன் வியாபார உறவுகளை வைத்துக்கொள்வது யார்?

தீவிரவாதி என இத்தனை வருடங்கள் அறியப்பட்ட இவர்களை ஏற்றுக்கொள்ள சமுதாயம் தயாராக இருக்கிறதா?

இவர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள சமுதாயம் தயாராக உள்ளதா?

இன்னும் ஏராளமான கேள்விகள்.. விடை தெரியாத கேள்விகள்.

செய்தியை கேள்விப்பட்ட நாம் சிறிது அனுதாபத்தை கொட்டிவிட்டு நமது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை... கேள்வி குறியுடன் முடிக்க நான் விரும்பவில்லை.
சிந்தனைக்கு
ஏர்வை ரியாஸ்

0 comments:

Post a Comment