Saturday, March 26, 2011

திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு


Traffic Ramasamyசென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரமாரியாக அறிவித்துள்ள இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது போல அமைந்துள்ளது சில கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புத் திட்டங்கள். இந்த இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமி தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியை எதிர்த்து போட்டி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட திருவாரூரிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி.

அங்கு உதவி தேர்தல் அதிகாரி ஜெயராஜிடம் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி.
thank u to thatstamil

0 comments:

Post a Comment