Friday, March 11, 2011

மாவீரன் மருத நாயகம்


வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.
காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!
ஊரும், பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.
வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.
மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!
பிரெஞ்சுப் படையின் ஆயுதம்
பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.
ஆற்காடு நவாப்
ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.
அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.
சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.
இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.
திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.இன்ஷாஅல்லா தொடரும்

0 comments:

Post a Comment