Tuesday, March 1, 2011

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு-11 பேருக்கு தூக்கு, 20 பேருக்கு ஆயுள்

அகமதாபாத்: கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு, உ.பி. மாநிலம் அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர சேவர்கள் குஜராத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது திடீரென அதில் இருந்த எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக்கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 94 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில், கடந்த 22ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, 31 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெளலானா உமர்ஜி உள்ளிட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரமில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 31 பேர் மீதான தண்டனை விவரத்தை நீதிபதி ஆர்.ஆர்.படேல் அறிவித்தார். அதன்படி 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டியது, அதை நிறைவேற்றியது, ரயிலை எரித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment