Wednesday, November 16, 2011

இஸ்லாமிய முறை குடியரசு ஆட்சியே - யூசுப் அல் கர்ளாவி


தூனிஸிய, லிபிய, எகிப்திய தலைவர்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் மக்களை தாறுமாறாகக் குழப்பினார்கள். அதேபோன்ற ஒரு முடிவுதான் சிரியாவின் பஷர் அல் அஸதினதும் யெமனின் அலி அப்துல்லாஹ் ஸாலிஹினதும் அரசாங்கங்களுக்கு ஏற்படும் என்று முன்னணி இஸ்லாமிய அறிஞரான ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார்.

‘குடும்ப ஆட்சி யுகம் முடிவடைந்துவிட்டது. தூனிஸியாவின் ஸெய்னுலாப்தீன் பின் அலியினதும், எகிப்தின் ஹுஸ்னி முபாரக்கினதும், லிபியாவின் முஅம்மர் கடாபியினதும் குடும்பங்கள் இதற்கு சிறந்த உதாரணம்” என சஞ்சிகை ஒன்றிக்கு அளித்த பேட்டியில் கர்ளாவி குறிப்பட்டுள்ளார்.

‘‘இந்த அரசாங்கங்கள் எல்லாமே இப்போது பழங் கதையாகிவிட்டன. அறபுப் புரட்சி மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றிவிட்டது. அவை 100 வீதம் ஜனநாயக புரட்சிகளாகும். இது வெளி உலகத்திற்கு மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துவிட்டது. மக்கள் எதிராக கிளர்ந்தெழுந்த அரசாங்கங்கள் பற்றி அமெரிக்கர்களுக்குக் கூட எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் மார்ச் நடுப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. இவற்றில் ஈடுபட்ட 3,500 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. யெமனில் 10 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய எழுச்சி காரணமாக இதுவரை பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 

‘‘அவர்கள் குடியரசுகளை முடியாட்சிகளாக தரம் இறக்கினர். அதை குடும்ப ஆட்சியாக மாற்றினர். குடியரசு முறைதான் உண்மையான இஸ்லாமிய முறையாகும்” எனவும் கர்ளாவி இந்நேர்காணலில் கூறியுள்ளார்.

‘‘ஒரு தலைவரின் ஆட்சிக்காலம் கட்டாயம் உதாரணத்திற்கு 4 வருடம் கொண்ட ஒரு காலப்பிரிவாக மட்டுப்படுத்தப்பட வேண்டும். அல்லது இது 4 வருடம் கொண்ட இரு காலப்பிரிவுகளாக (மொத்தம் 8 வருடங்கள்) இருக்க முடியும். லிபியாவில் ஆட்சியாளர் 42 வருடங்களாக பதவியிலிருந்தார். யெமனில் 33 வருடங்கள். சிரியாவில் அஸதின் குடும்பம் நீண்ட காலம் ஆட்சியிலிருக்கின்றது” என கர்ளாவி மேலும் தெரிவித்துள்ளார்.
source- yarlmuslim

0 comments:

Post a Comment