Thursday, November 17, 2011

சிரியாவில் புதிய திருப்பம் - புதிய மோதல்கள் ஆரம்பம்



சிரிய விமானப் படையின் உளவுப் பிரிவு கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற சிரியாவின் சுயாதீன இராணுவப் படை இந்த தாக்குதலை நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிரியாவில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து கடந்த 8 மாதங்களில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸின் தெற்காக அமைந்துள்ள ஹரஸ்டா பகுதியில் இருக்கும் விமானப் படையின் உளவுப் பிரிவு கட்டடத் தொகுதி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த சுயாதீன இராணுவப் படை இந்த கட்டடத் தொகுதி மீது நேற்று அதிகாலை அளவில் எறிகணை மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் மேற்படி உளவுப் பிரிவு கட்டடம் சேதமடைந்துள்ளதோடு பல மணி நேரமாக இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் தெரியவில்லை.

சிரியாவில் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளில் 70 பேரளவில் கொல்லப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்திற்கு பின்னரே உளவுப் பிரிவு தளத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் இராணுவ மற்றும் விமானப்படை உளவுப் பிரிவுகள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இந்த இரு பிரிவுகளும் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதில் சிரிய பாதுகாப்புப் படை ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சகோதரர் மஹரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் முக்கிய பதவிகளில் ஷியா முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். இதனால் அருதிப்தியடைந்த இராணுவத்தினரின் பெரும்பான்மையினரைக் தொண்ட சுன்னி முஸ்லிம்கள் சிலர் பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஏற்கனவே சிரிய அரசு, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் 1,100 இராணுவத்தினரை கொன்றுள்ளதாகவும் சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரியாவை அரபு லீக் அமைப்பு தடை நீக்கம் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சிரியாவுக்கு விநியோகித்துவரும் மீன்சாரத்தை தடை செய்யப் போவதாக அயல்நாடான துருக்கி எச்சரித்துள்ளது.

துருக்கியின் வலு சக்தி அமைச்சர் டனர் யில்டிஸ் துருக்கியின் அனடோலியன் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், “நாம் சிரியாவுக்கு தற்போது மின் சாரத்தை வழங்கி வருகிறோம். சிரியா தொடர்ந்து இவ்வாறே செயற்பட்டால் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவது பற்றி மீள் பரிசீலனை செய்யவேண்டி இருக்கும்” என குறிப்பிட்டார்.

இதேபோன்று சிரியா கத்தினுனியில் நடந்து வருவதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகான் எச்சரித்துள்ளார். அத்துடன் சிரிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் அவரையும் ரத்தம் உண்ணும் தலைவராக மாற்றிவிடும் என குறிப்பிட்டார். இந்நிலையில் சிரியாவிலும் மற்றுமொரு சிவில் யுத்தம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவனீதன் பிள்ளை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், பொது மக்களின் அமைதியான கோரிக்கைகளுக்கு வன்முறையால் பதலளிக்க முற்படும் நிலையில் அவர்களும் மேலும் ஒரு கிளிர்ச்சிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறுதான் லிபியாவிலும் ஏற்பட்டது. சிரியாவிலும் இது நிகழவாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே சிரியா விவகாரம் குறித்து ஆலோசிக்க அரபு லீக் அமைப்பின் அவசரக் கூட்டம் நேற்றும் மொரோக்கோவில் நடைபெற்றது. எனினும் இந்த கூட்டத்தை சிரிய அரசு புறக்கணித்தது.

0 comments:

Post a Comment