Thursday, November 17, 2011

அவுஸ்திரேலியாவிலும் அமெரிக்க படைகள் - சீனா எதிர்ப்பு



அமெரிக்க மரைன்ஸ் படையினர் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரையிலானவர்கள் தங்கக்கூடிய இராணுவ தளம் ஒன்று ஆஸ்திரேலிய மண்ணில் உருவாக்கப்படுவதற்கு சீனாவிடம் இருந்து விமர்சனமும் எதிர்ப்பும் கலந்த பதில் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா இராணுவ ரீதியில் பங்களிப்பு செய்வதென்பது கணிசமான அளவில் அதிகரிக்கப்போகிறது என்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோடிகாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா வந்திறங்கி உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆசிய பசிஃபிக் வட்டகை முழுமைக்குமான தமது கவனம் அக்கறையெல்லாம் இனி அதிகரிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள இராணுவ தளத்தில் முதலில் சில நூறு மரைன்ஸ் படையினர் இருப்பார்கள். பின்னர் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறாக அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தப்படுகின்ற இந்த புதிய வசதிகளையெல்லாம் அமெரிக்க இராணுவ விமானங்களும் போர்க் கப்பல்களும் பயன்படுத்திக்கொள்ளும். இராணுவ ரீதியில் பார்த்தால் இவையெல்லாம் சின்ன ஆரம்பம்தான் என்றாலும், இதன் மூலம் வெளியிடப்படும் அரசியல் சமிக்ஞைகள் பெரியவை என்று சொல்லலாம்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் குவிந்துவிட்டிருந்த அமெரிக்காவுடைய கவனம் தற்போது மீண்டும் ஆசிய பசிபிக் வட்டகைக்கு திரும்புகிறது என்ற செய்தியை உலகுக்கு சொல்ல ஒபாமா நிர்வாகம் ஆர்வமாக இருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவுடைய இந்த நகர்வுக்கு சீனா எச்சரிக்கையாக அதேநேரம் எதிர்ப்பு காட்டும் வகையில் பதில் தருந்துள்ளது.

தெற்கு சீனக் கடற்பரப்பில் எழுகின்ற எல்லைத் தகராறுகளை அப்பகுதி நாடுகள் ஒருவரை ஒருவர் மிரட்டாமல் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் சென்றுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியதற்ககு சீனா தெரிவித்துள்ள பதில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாதவர்கள் தலையிடுவது எந்த வகையிலும் பிரச்சினையைத் தீர்க்க உதவப்போவதில்லை என சீன வெளியுறவுத்துறை சார்பாகப் பேசவல்ல ஒருவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவுடைய தற்போதைய நகர்வு ஆஸ்திரேலியா போன்ற அதனுடைய கூட்டாளி நாடுகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கலாம், ஆனால் சீனாவுக்கு இதுஎரிச்சலூட்டும் ஒன்றாகவே அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment