Wednesday, November 30, 2011

பிரிட்டன் புதன்கிழமை அதிரும்


பிரிட்டனில் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை எதிர்த்து, 30 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ள பிரமாண்டமான பொது வேலை நிறுத்தம், புதன்கிழமை நடக்க உள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரிட்டனுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு, அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களில் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்திற்காக பொதுத் துறை ஊழியர்கள் அதிகளவில் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்; கூடுதல் நேரம் உழைக்க வேண்டும். ஆனால், இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, நாட்டின் 20 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 30ம் தேதி புதன்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இந்த வேலை நிறுத்தத்தால், பள்ளி, கல்லூரிகள், சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் உள்ளிட்ட அன்றாட வாழ்வின் அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

இந்த பொது வேலை நிறுத்தத்தில், 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 1926ல் நடந்த வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து, இந்த வேலை நிறுத்தம் தான் மிகப் பெரிய அளவில் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

வேலை நிறுத்தத்தில், விமானப் போக்குவரத்து ஊழியர்கள், எல்லைப் பாதுகாப்பு ஊழியர்கள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, விமான போக்குவரத்து சேவையில் அதிக கால தாமதம் ஏற்படும் என்பதால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் லண்டனுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
yarlmuslim

0 comments:

Post a Comment