Tuesday, November 15, 2011

காஷ்மீர் முஸ்லிம் உறவுகளுக்கெதிரான இராணுவ அடக்குமுறை தொடருகிறது



உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தினர் ஈடுபடும் போது அவர்கள் செய்யும் செயல்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி வரும் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இது குறித்து பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளார். தனது மாநிலத்தில் வன்முறை குறைந்துவிட்டது அதனால் இது போன்ற சட்டங்கள் இனி தேவையில்லை என்பது முதல்வரின் வாதமாக உள்ளது.

ஆனால் இந்த சட்டத்தை விலக்கிக் கொள்வது தொடர்பாக கால நிர்ணயம் ஏதும் விதிக்கப்பட முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி கூறியுள்ளார். அதே நேரம் இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கூடாது என்று மூத்த இராணுவத் தளபதிகள் ஜம்மூ காஷ்மீர் மாநில முதல்வரிடமும் - மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளனர்.

இது தவிர இந்த சட்டம் விலக்கப்படக்கூடாது என்று இராணுவ ஜெனரல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊடகங்களிடமும் சொல்லிவருகின்றனர். உணர்வுகளைத் தூண்டக்கூடிய முக்ககியமானதொரு பிரச்சனையில் இராணுவத்தினர் தமது கரிசனத்தை அரசுக்கு நேரடியாக - ரகசியமாக தெரிவிப்பதை விடுத்து இப்படி பகிரங்கமாக பேசுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல, இது விரும்பத்தகாத விடயங்களுக்கு வழிகோலும் என்று சில ஆய்வாளர்கள் கவலைவெளியிட்டுள்ளனர். 

இராணுவத்தினருக்குத் தேவையான ஆயுதக் கொள்முதல், சம்பள விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட இராணுவத் தளபதிகளின் கருத்துக்களுக்கு அரசியல்வாதிகள் உரிய மதிப்பை கொடுக்காமல் இருப்பதால்தான், தமது கரிசனைகள் குறித்து ஊடகங்கள் மூலம் பேசும் நிலை இராணுவத் தளபதிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார்.
sources-yarlmuslim

0 comments:

Post a Comment