Wednesday, November 30, 2011

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!



தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.

இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து  வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே,  "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக் கடனில் தத்தளிக்கிறது. நான் உட்பட தமிழக பாமர மக்களின் சந்தேகம், கடந்த ஐந்து  வருடங்களில் மட்டும் தானா பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.?" என்று கேட்டுள்ளார். அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கருணாநிதிக்கு முன்னர் நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் இவையெல்லாம் லாபத்தில் இயங்கி வந்தனவா?

பேருந்துக் கட்டண உயர்வால் தமிழக மக்கள் படும் இன்னல்கள் உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஊருக்குச் சென்று விட்டு சொந்த ஊர் திரும்ப கையில் பேருந்துக் கட்டணத்துக்கான முழுத் தொகையும் இல்லாமல் போக வேண்டிய இடத்துக்கு முன்னரே இறங்கி நடந்து சென்றதாகவும், பேருந்தில் ஏறிய சிலர் கண்டக்டர் சொன்ன டிக்கெட் ரேட்டைக் கேட்டு மாரடைப்பு வராத குறையாக இறங்கிய செய்திகளும் உங்கள் பார்வைக்கு வந்தனவா என்று தெரியவில்லை.

இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராததாலேயே கட்டண உயர்வு என்று அறிக்கை விடும் முதல்வர் அவர்களே, மத்திய அரசு நிதியை நம்பித்தானா இலவசத் திட்டங்களை அறிவித்தீர்கள்?. இல்லை, இலவச திட்டங்களை அறிவிக்கும் முன்னர் மத்திய அரசைக் கேட்டு அவர்களின் உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர் அறிவித்தீர்களா?. உங்களிடம் யார் கேட்டது இலவசம்?. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலைகளை உயர்த்தாமல் இருந்தால் நீங்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தரும் இலவசத்தை நாங்களே வாங்கிக் கொள்வோமே. உங்கள் அமைச்சர் பெருமக்களுக்குக் கிடைக்கும் கமிசனைப் பெறவா இது போன்றதொரு இலவச  யுத்தி?

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாலும் அரசு கேபிளை ரூ 70 விலையில் ஒளிபரப்புவதாலும் தமிழக மக்களின் மனங்கள் மகிழ்ந்து விடப் போவதில்லை.  பேருந்துக் கட்டணம் என்ற பெயரில் தினம் பெறும் கூலியில் பாதியையும் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் மீதியையும் வாங்காமல் இருந்தாலே போதும்.

நஷ்டத்தை ஈடுகட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒரே வழி விலையை உயர்த்துவது தான். இவர்கள் எல்லாம் எப்படி இந்திய ஆட்சிப் பணி முடித்து வந்தார்கள் என்பது தெரிய வில்லை. தமிழக பொதுத் துறை  நிறுவனங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு முடியும் வரை நஷ்டத்தைச் சமாளித்து விட்டு கடைசி முயற்சியாக 15 முதல் 25 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி இருக்கலாம். ஒரேயடியாக பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். சரி தான்.   ஐந்து வருடங்கள் கடந்து மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற நிலையில் 10 வருடத்துக்கும் சேர்த்து ஏற்றி விடுங்கள் என்றுகூட உங்கள் ஆலோசனைக் குழு உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கக் கூடும்.

ஒரு நாளாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் நீங்களும் உங்கள் அமைச்சர் பெருமக்களும் போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குப் பயணம் செய்து பாருங்கள். தமிழக பேருந்துகளின் அவல நிலை உங்களுக்குத் தெரிய வரும்.  கேரள மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் படும் ஏழை முதல்வர்கள் போன்று தமிழ்நாட்டில் ஏழைகள் யாரும் முதல்வராகத் தேர்வு செய்யப் படாததே எங்களின் அவல நிலைக்குக் காரணம்.

அடுத்து தமிழக குடிமகன்களின் துயர் துடைக்க உங்கள் ஆட்சியில் எலைட் பார்களைத் திறக்க உள்ளதாக செய்திகள் மூலம் அறிந்தேன். வெளிநாட்டு மதுவகைகள் பரிமாறப் படும் எலைட் பாருக்குள் நுழையவே ரூ 50  கட்டணமாமே. மகத்தான திட்டத்தைக் கொண்டு வர உள்ள தமிழக முதல்வரே  வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயமாக இடம்பெறும்.

தினக் கூலி பெறுவோரில் பாதிபேர் இப்போது டாஸ்மாக் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். இனி எலைட் திட்டமும் வந்து விட்டால் உள்ளூர் சரக்கு அடித்து போரடித்து விட்டது என்று  வீட்டில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மனைவி  ஒன்று இரண்டு என சேர்த்து வைக்கும் பணத்தை லவட்டிக் கொண்டு போய் எலைட் பாரில் போய் வெளிநாட்டு சரக்கு அடிக்கும் வாய்ப்பைத் தமிழ்க் குடிமகன்களுக்கு ஏற்படுத்தி தர உள்ளீர்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

பல்வேறு நலத்  திட்டங்களை உங்கள் பொற்கரங்களால் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் அவர்களே, வரலாற்றுத் திட்டமாம் எலைட் பார் திட்டத்தையும் உங்கள் பொற் கரங்களால் தொடங்கி வைத்து தமிழ்க் குடிமகன்களின் வயிற்றில் வெளிநாட்டு மதுவை வார்ப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

வாழ்க அண்ணா நாமம்! வளர்க எம்.ஜி.ஆர் புகழ்! எக்கேடுகெட்டோ ஒழியட்டும் தமிழக மக்கள்!

- மொக்கையன்

நன்றி: இன்நேரம்

0 comments:

Post a Comment