Monday, November 21, 2011

கண் மூடும் வேளையிலே கண்ணீர்; அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி]!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா அல் மஹ்ரி[ரஹ்] கூறியதாவது;

இறக்கும் தருவாயில் இருந்த அம்ரு இப்னு அல் ஆஸ்[ரலி] அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பின்பு சுவற்றின் பக்கம் தமது முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அப்போது அவர்களின் மகன், என் தந்தையே! உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இன்னின்ன நற்செய்திகள கூறவில்லையா என [அறுதல் சொல்லும் வகையில்] கேட்டார். உடனே அம்ரு இப்னு அல்ஆஸ்[ரலி] அவர்கள் தமது முகத்தை [தம் புதல்வரை நோக்கி] திருப்பி [பின்வருமாறு] கூறினார்கள்;
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத்[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்ததாகும். நான்[என் வாழ்நாளில்] மூன்று கட்டங்களை கடந்து வந்துள்ளேன்.

[முதலாவதுகட்டத்தில்] அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது கடுமையான வெறுப்பு கொண்டவர் என்னைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது என்று நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களை கொன்றுவிடவேண்டும் என்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மட்டும் நான் மரணித்திருந்தால் நரகவாதிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன்.

[இராண்டாவது கால கட்டத்தில்] அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை புகுத்தினான். அப்போது நான் நபியவர்களிடம் சென்று உங்கள் வல்லக்கரத்தை நீட்டுங்கள் நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் [பைஅத்] அளிக்கிறேன் என்றேன். நபி[ஸல்] அவர்கள் தமது வலது கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கரத்தை இழுத்துக் கொண்டேன். நபி[ஸல்] அவர்கள், அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று என்றார்கள். நான் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். நபி[ஸல்] அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறீர் என்று கேட்டார்கள். என் [முந்தைய] பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கூறினேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உங்கள் முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும். ஹஜ்ஜும் முந்தையா பாவங்களை அழித்துவிடும் என்பது உமக்கு தெரியாதா என்றார்கள். [பின்பு நான் இஸ்லாத்தை தழுவினேன்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை விட மிகவும் பிரியமானவர் எவரும் எனக்கில்லை. எனது பார்வைக்கு அவர்களைவிட கண்ணியமானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால் என் கண்கள் நிரம்ப, அவர்களை பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில் அவர்கள் மீது நான் கொண்ட மரியாதையினால், என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அந்த நிலையில் நான் மரணித்திருந்தால் நான் சொர்க்கவாசிகளில் ஒருவானாக ஆகியிருப்பேன் என்றே கருதுகிறேன்.

பிறகு [மூன்றவாது கட்டத்தில்] பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலை என்ன என்று எனக்குத்தெரியாது.
[ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்]

அன்பானவர்களே! அம்ரு இப்னுஆஸ்[ரலி] அவர்களை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த பொன்மொழியில் தமது வாழ்வின் மூன்று கட்டங்களை குறிப்பிடுகிறார்கள் அந்த மேதை. முதல் கட்டம் இஸ்லாத்திற்கு எதிரான நிலை அதாவது நரகத்தின் விளிம்பில்.
இரண்டாவது இஸ்லாத்திற்குள் அதுவும் இறைத்தூதரை உயிருக்கு உயிராக நேசிக்கும் காலகட்டம் அதாவது சொர்க்கத்தின் வாயிலில்.
மூன்றாவது பல்வேறு பொறுப்புகள சுமந்த காலகட்டம். இந்த மூன்று காலகட்டங்கலில் எதைக் குறித்து அம்ரு இப்னு ஆஸ் [ரலி] அவர்கள் கைசேதப் படுகிறார்கள் என்றால், 
மூன்றாவது காலகட்டம் அதாவது பொறுப்புகளை வகித்த காலகட்டம் குறித்துதான். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டம் குறித்து அவர்கள் கவலைப் படவேண்டியதில்லை. ஏனெனில், அதில் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் என்று இறைத்தூதர்[ஸல்] அவர்கள் உத்திரவாதம் அளித்து விட்டார்கள். ஆனால் பொறுப்புகள் வகித்த காலத்தில் நாம் தவறு இழைத்திருந்து அதனால் அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கப் படுவோமோ என்று கண்ணீர் சிந்தி கவலை கொள்கிறார்கள் எனில், 
பதவி வரும்போது பணிவும்-துணிவும் வந்தால் போதாது; அங்கே பயமும் அதாவது இறைவனின் பயமும் வரவேண்டும். ஏனெனில் பொறுப்பில் உள்ளவர்கள் தாம் செய்வதை குறித்து திருப்தி அடையலாம். ஆனால் அந்த செயல்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்படுமா என்ற அச்சம் ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் இருக்கவேண்டும். அத்தகைய சிறந்த படிப்பினைக்கு அம்ரு இப்னு ஆஸ்[ரலி] அவர்கள் முன்னுதாரமாக திகழ்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக!


0 comments:

Post a Comment