இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் விமான சேவை நடத்திவரும் காம்டெல் ஏர் நிறுவனம், விமானத்துக்கு எரிபொருள் போட பயணிகளிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலித்துள்ளது.
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணிகள் சிலர் அசாதாரணமான ஒரு கதையைச் சொன்னார்கள். இந்தியாவின் அம்ரித்ஸர் நகரிலிருந்து காம்டெல் நிறுவன விமானம் ஒன்றில் தாங்கள் வந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அந்த விமானம் ஆஸ்திரியாவில் தரையிறங்கியது என்றும், ஆனால் எரிபொருள் வாங்குவதற்கான பணம் அந்த விமான நிறுவனத்திடம் இல்லை என்றும் பயணிகள் சொன்னார்கள்.
அந்த விமானத்தில் இருந்த சிப்பந்திகள் பயணிகளைப் பார்த்து, தங்களுக்கிடையில் பணம் திரட்டி இருபது ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான ஒரு தொகையை சுமார் முப்பதாயிரம் டாலர்களை திரட்டித் தந்தால்தான், எரிபொருள் வாங்கி நிரப்பிக்கொண்டு அந்த விமானத்தை அங்கிருந்து கிளப்ப முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
கையில் பணம் வைத்தில்லாதவர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். இயந்திரத்துக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று பயணிகள் கொதித்தும் திகைத்தும் போனார்கள்.
நிறுவனம் தந்த விளக்கம் - காம்டெல் ஏர் விமான சேவை நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரர் என்பவர் இந்தியத் தொழிலதிபர் புபிந்தர் கந்த்ரா ஆவார். தங்களது விமானங்களுக்கு டிக்கெட்டுகளை விற்றுத்தரும் பிரிட்டிஷ் முகவர் நிறுவனம், விற்ற டிக்கெட்டுகளுக்கு உண்டான பணத்தை தராமல் விட்டுவிட்டது என அவர் விளக்கினார்.
பயணிகளிடம் இருந்து வாங்கிய பணத்தை டிக்கெட்டுகளை விற்ற பிரிட்டிஷ் நிறுவனம்தான் திரும்ப வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நிறுவனத்துடைய விமானங்களில் இந்தியாவில் இருந்து பிரிட்டன் திரும்ப இருந்தவர்கள் சிலர் சென்ற வாரக் கடையில் இருந்தே இந்தியாவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இந்த வழியில் பறந்துகொண்டிருந்த காம்டெல் நிறுவனத்தின் எல்லா சேவைகளும் குறைந்தது அடுத்த ஞாயிற்றுக்கிழமைவரை ரத்தாகியுள்ளன. ஆதலால் இந்தியாவில் சிக்குண்டுள்ள பிரிட்டிஷ் பயணிகள் எப்போது ஊர் திரும்ப முடியும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
0 comments:
Post a Comment