வீழ்ச்சியடைந்த லிபிய ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் காலத்தில் கடுமையான அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம், அதன் முதலாவது பகிரங்க மாநாட்டை நடத்தியுள்ளது.
சென்ற வியாழனன்று லிபியாவின் இரண்டாவது பெருநகரமான பெங்காசியில் தொடங்கிய இம்மாநாடு மூன்று நாட்களாக நடைபெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா லிபியக் குழுக்களையும் ஒன்றிணையுமாறு இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது.
'இது எமக்கும் லிபிய மக்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்” என இயக்கத்தின் தலைவர் சுலைமான் அப்துல் காதர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தூனிஸிய அந்நஹ்ழா இயக்கத்தினதும் சிரிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினதும் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
1949இல் ஆரம்பிக்கப்பட்ட லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் நடத்திய முதல் பகிரங்க மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கால் நூற்றாண்டாக லிபியாவினுள் இயக்கத்தின் பகிரங்க கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடாபியின் அடக்குமுறையினால் இரகசிய கூட்டங்களே நடந்துள்ளன. மாநாடுகள் வெளிநாடுகளிலேயே நடைபெற்றன.
அங்கத்தவர்கள் பலர் தமது அடையாளத்தை இரகசியமாகவே வைத்திருந்தனர். இம்மாநாட்டில் தம்மை இஹ்வான்களாக வெளிப்படுத்தியவர்களுள், அறிஞர்களும் உயர் பட்டங்களைப் பெற்றவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசமுடியுமானோரும் உள்ளடங்கியிருந்தனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுதான் சுதந்திரம். எங்களுக்கு இது கனவுபோல இருந்தது' என்று கூறினார் அப்துல்லாஹ் தஹ்மானி. 65 வயதான இவர் இரசாயனவியல் துறையில் பல்கலைகழக விரிவுரையாளராக உள்ளார்.
source-yarlmuslim
0 comments:
Post a Comment