Tuesday, November 22, 2011

தாகிர் சதுக்கம் அதிருகிறது - எகிப்து அமைச்சரவை ராஜினாமா



எகிப்தில் கடந்த ஞாயிறன்று போராட்டக்காரர்கள் படையினராலும், பொலிஸாராலும், வன்முறை மூலம் கலைக்கப்பட்டதை அடுத்து ‌மீண்டும் போராட்டக்காரர்கள் கெய்ரோவின், தஹ்ரீர் சதுக்கத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். எகிப்தை தற்போது ஆளுகின்ற இராணுவ கவுன்ஸில் தனது நாட்டின் மீதான பிடியை தொடர்ந்து இறுக்கி வைத்திருக்க முனைகிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தமக்கு எதிரான போராட்டங்களை இராணுவம் வன்முறை கொண்டு அடக்க முயன்றாலும், தாம் இனியும் வாய் மூடி மௌனியாக இருக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்கார்கள் கூறுகிறார்கள். இங்கு அதிபர் முபாரக்கின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் மீது இராணுவம் அனாவசியமான குற்றச்சாட்டுக்களுடன் வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாகக் கூறும் மக்கள், அதற்கு காரணமான இராணுவ நீதி முறைமை மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

இராணுவத்தால் தொடர்ந்தும் இங்கு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக விபரிக்கிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த ஹெபா மொராஃப். ''முபாரக் ஆட்சி வீழ்த்தப்பட்டது முதல் இராணுவ அதிகாரிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைதியான போராட்டக்காரகள் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பல பெண்களுக்கு கன்னித் தன்மைகான சோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கனவர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இராணுவத்தை விமர்சித்தவர்கள் மீது இராணுவத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளது'' என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

எகிப்தின் ஆட்சியை நடத்துவதில் இராணுவம் நிச்சயமாக மிகவும் மூர்க்கமாகச் செயற்படுகின்றது. தமக்கு எதிராக விமர்சனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவர், ஆனால் எகிப்தில் மாற்றங்களை ஒரே நாளில் கொண்டுவந்துவிட முடியாது என்று கூறுகிறார். உண்மையில் ஒரு போலியாக ஜனநாயகத்தை தருவதாக காட்டி விட்டு இராணுவம் உண்மையான அதிகாரத்தை தம் வசமே வைத்துக்கொண்டு விடுமோ என்ற அச்சம் எகிப்தில் அதிகமாகக் காணப்படுகின்றது.

இராணுவம் அரசியல் ரீதியாக தனது இலக்குகளை அடிக்கடி மாற்றிக்கொன்டிருப்பதாகக் கூறும் முன்னாள் தூதுவர் ஒருவர், ஆனால், அது தவறுகளில் இருந்து கற்று முன்னேற விளைவதாகவும், இராணுவம் மீன்டும் சர்வாதிகாரத்தை நோக்கிச் சென்றுவிடும் என்று அஞ்சத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.

இராணுவம் தம்மால் செய்யக்கூடியதை மிகவும் சிரமப்பட்டு செய்ய முயற்சிக்கிறது என்பதுதான் இராணுவம் குறித்து கூறக்கூடிய மிகவும் மென்மையான விமர்சனக் கருத்தாகும். ஆனால், இராணுவத்தினர் எதிர்கால எகிப்துக்கு நன்மை செய்ய விரும்புவார்களானால், தமது அதிகாரங்களை பொதுமக்களின் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தமது தளங்களுக்கு இராணுவத்தினர் திரும்பிவிட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது.


எகிப்தில் நடந்த தொடர் போராட்டம் காணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டது. எகிப்தில் ராணுவத்துக்கு எதிராக கடந்த 3 நாட்களாக நடந்து வரும் சண்டையில் 35 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ராணுவம் வெளியிட்டது. இதில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கடந்த 3 நாட்களாக தாகிர் சதுக்கத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எகிப்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
source-yarlmuslim

0 comments:

Post a Comment