Tuesday, April 30, 2013

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: நம்பிக்கையுடன் 199 தொகுதிகளில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணி!

sdpi karnataka
 
     பெங்களூர்:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பிக்கையுடன் களத்தில் உள்ளது. இக்கூட்டணி 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 175 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
 
     கட்சி உருவாக்கப்பட்ட பிறகு எஸ்.டி.பி.ஐ முதன் முதலாக கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
 
      மாநகராட்சி-உள்ளாட்சி தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ தனது பலத்தை நிரூபித்திருந்தது.பெங்களூர், மங்களூர் மாநகராட்சிகளில் எஸ்.டி.பி.ஐக்கு கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும் 70க்கும் அதிகமான இடங்களை எஸ்.டி.பி.ஐ வென்றது.
 
     முஸ்லிம்-தலித் வாக்குகளை குறிவைத்துள்ள எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணியை முக்கிய அரசியல் கட்சிகள் கவலையுடன் பார்க்கின்றன.
 
                    
 
     25 சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள், 14 சதவீதம் முஸ்லிம்கள் ஆகியோரின் பிரச்சனைகளையும், உரிமைகளையும் எழுப்பி எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜின் புதிய கூட்டணி களத்தில் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியான ஆம் ஆத்மியின் கர்நாடகா பிரிவு எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவு அளித்துள்ளது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் புலிகேஷ் நகர் தொகுதியிலும், மைசூரில் நரசிம்ஹராஜா தொகுதியிலும் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
     புலிகேஷ் தனி தொகுதியில் எம்.பி.ஏ பட்டதாரியான ஹேமலதா எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் ஆவார்.1,85,561 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில் 94, 664 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த மாநகராட்சி தேர்தலில் பீஜிஹள்ளி வார்டில் போட்டியிட்டு 3 ஆயிரம் வாக்குகளை ஹேமலதா பெற்றிருந்தார்.இத்தொகுதியில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளரும் இவரே. தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏவான பிரச்சனா குமார் முக்கிய எதிராளி.
 
     மைசூரின் நரசிம்ஹராஜா தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் அப்துல் மஜீதும் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தன்வீர் சேட், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வாக்காளர்களிடையே உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தலில் 13 இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ 4 இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தது.இதுவும் எஸ்.டி.பி.ஐயின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.மொத்தம் வாக்காளர்களில் (2,33,016) முஸ்லிம் வாக்காளர்கள் 93 ஆயிரம் பேரும், ஒடுக்கப்பட்ட சமூக வாக்காளர்கள் 50 ஆயிரம் பேரும் உள்ளனர்.
 
     மஹ்பூப் ஆவாத் ஷெரீஃப்(சர்வஞ்ச நகர்), உஸ்மான் பேக்(சாமராஜ் பேட்), முஜாஹித் பாஷா(சிக்பேட்டா), வழக்கறிஞர் அப்துல் மஜீத்(பண்ட்வால்), முஸப்பா(சுள்ளி), உத்தமஜ்ஜய்யா(ஹுஸூர்) ஆகியோர் அதிகமான வாக்குகளை பெறுவார்கள் என கருதப்படுகிறது.
 
     பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மாரஸந்திர முனியப்பா, டாக்டர் சி.எஸ்.துவாரகாநாத், என்.மகேஷ் மற்றும் எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment