Monday, April 22, 2013

SIMI ?


     மகனுக்கு "சிமி" இயக்கத்துடன் தொடர்பு? எனக்கூறி "தாய்"க்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு : மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம்!

       மகன் "சிமி" இயக்கத்துடன் தொடர்புடையவர் எனக்கூறி, அவரது தாய்க்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்தது சரியல்ல, என்று தீர்ப்பளித்த சென்...னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கே.கே.சசிதரன், தனிப்பட்ட நபர்களின் தவறுகளை - அவர் சார்ந்த சமுதாயத்துடன் தொடர்பு படுத்தி பார்க்கும் போக்கையும் கண்டித்தார்.

     (தீர்ப்பின் ஆங்கில வாசகம் :- "Merely because a person or a section of a particular community indulged in acts of violence or extremism, it cannot be concluded that the other members of the said community are also the followers of such violent activities. It is not correct to paint everybody with the same brush. The attempt should be to bring all such people to the mainstream. There should be a sea change in our mindset,")

வழக்கின் விபரம் :-

      மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த பாரி என்ற "பாத்திமா" என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்:

      திருச்சி மண்டல பாஸ்போர்ட் மையத்தில் இருந்து பெற்ற, எனது "பாஸ்போர்ட்"டின் ஆயுட் காலம் "2011 ஏப்ரல் மாதம்" முடிவடைந்ததால், மதுரை மண்டலத்தில் இருந்து புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தேன். அப்போது மேலூருக்கு இடம் மாறியிருந்ததால் பாஸ்போர்ட்டைப் பெறமுடியவில்லை.

      இது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு "கரிமேடு" பகுதியிலிருந்து மேலூருக்கு இடம் மாறியதை தெரிவித்தேன்.

      இதையடுத்து இருப்பிடம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

      "சிமி' இயக்கத்தோடு எனது மகன் "முகமதுரியாஸ்" தொடர்பு உள்ளவர் என்றும், பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறி, எனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது.

       இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடர்ந்தேன். எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடப்பட்டது.

      ஆனாலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த மகனைப் பார்ப்பதற்கு நான் "பிரான்ஸ்" செல்ல வாய்ப்பு உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

      நான், துபாயில் உள்ள எனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளைப் பார்க்கச் செல்லவேண்டும். எனவே எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்த காரணம் சரியானதல்ல.

      அவரது பரிந்துரையை ரத்து செய்து, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும், என வழக்கு தொடர்ந்தார், பாத்திமா.

      வழக்கை விசாரித்து நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு:

       மகன் "சிமி' இயக்கத்தில் உள்ளதால் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்தது சரி தானா? என்பது முக்கியமான கேள்வியாகும்.

      மனுதாரர் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்பதை ஆய்வு செய்யவேண்டிய போலீஸார், அவர் மகனுக்கு சிமியுடன் தொடர்பு எனக்கூறி, அவரது தாய்க்கு பாஸ்போர்ட் வழங்க தடை ஏற்படுத்துவது சரியல்ல.

       எனவே, சட்டப்படி அவரது மனுவை ஆய்வு செய்து மனுதாரருக்கு 90 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என வெள்ளியன்று (19/04) உத்தரவிட்டார், நீதியரசர்,சசிதரன்.



0 comments:

Post a Comment