Sunday, April 14, 2013

உச்சநீதிமன்ற தீர்ப்பு:தமிழர்கள் உள்பட 17 பேரின் நிலை கேள்விக்குறி???!!!

14 Apr 2013
புதுடெல்லி:கருணை மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் மரணத்தண்டனையை குறைக்க முடியாது என்று தேவேந்திர புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் உள்பட 17 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
 
     ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்கள் 11 ஆண்டுகாலம் கழித்து நிராகரித்ததால் அவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தூக்கை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. அதே நாளில் தமிழக சட்டசபையிலும் மூன்று தமிழருக்கு தூக்கு நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
     இருப்பினும் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையுடன் புல்லர் வழக்கு விசாரணை நடைபெற்றதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 தமிழர்கள் தாக்கல் செய்த மனுவை தானே எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். தற்போது புல்லர் வழக்கில் அவரது மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து 3 தமிழரின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். இந்த விசாரணையை விரைவுபடுத்துவது அல்லது தாமதப்படுத்துவது என்பது மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசு வழக்கறிஞர்கள் திங்கள்கிழமையே கூட உச்சநீதிமன்றத்தில் 3 தமிழர் மனு மீதும் விசாரணையை நடத்தக் கோரினால் புல்லர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் தாக்கம் அதிலும் இருக்கக் கூடும்.
 
     மேலும் வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகியோரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், புல்லர் வழக்கில் அளிக்கபப்டும் தீர்ப்பின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து 6 வார காலத்துக்கு தூக்கை நிறைவேற்ற தடை விதித்திருந்தார்.
 
     தற்போது புல்லர் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிற நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் மனு மீது இனி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படும். புல்லர் மனுவை நிராகரிக்க கருணை தாமதம் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஒரு குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை அதாவது ஆயுள் தண்டனையைப் போல நீண்டகாலம் சிறையில் இருப்பது, பின்னர் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது என எப்படி விதிக்க முடியும் என்றும் என்ற கேள்விக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் பதிலில்லை.
 
     இது பற்றி மூன்று தமிழர் வழக்கில் கேள்வி எழுப்புவோம். தூக்கை ரத்து செய்ய கருணை மனு தாமதத்தை காரணமாக கொள்ளலாம் என்று 1989ஆம் ஆண்டு மூன்று பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கின்றன. அதனடிப்படையிலும் மூன்று தமிழர் வழக்கில் வாதாடுவோம் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.
 
     மேலும் ராஜீவ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வழக்குரைஞரான எஸ்.துரைசாமி கூறுகையில்,’புல்லர் வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுத்தாது.புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் சட்டத்தின் அனைத்து புறங்களையும் பரிசோதிக்கவில்லை. நாட்டின் உண்மையான பிரச்சனைகளையும் பரிசீலிக்கவில்லை.’ என்றார். ’உச்சநீதிமன்றம் புல்லரின் வழக்கில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ளது’ என்று வழக்கறிஞரான எம்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.’
 
     10 வருடங்களாக கருணை மனு மீது தீர்மானம் எடுக்காததால் ஆயுள்தண்டனைதான் வழங்கவேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார். புல்லர் வழக்கின் தீர்ப்பில் பீதிவயப்படவில்லை என்று ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகிறார்.’புல்லரின் வழக்கும், தனது மகனின் வழக்கும் மாறுபட்டது’ என்று அவர் தெரிவிக்கிறார்.

0 comments:

Post a Comment