Thursday, April 25, 2013

செர்பியாவும், கொஸாவாவும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன!

                      25 Apr 2013 Serbia, Kosovo, Romania, and Bosnia and Herzegovina Overview map
 
     பெல்க்ரேட்:தீவிர செர்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பால்கன் அண்டை நாடுகளான செர்பியாவும், கொஸாவாவும் ஐரோப்பிய யூனியன் மத்தியஸ்தம் வகிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.இதன் அடிப்படையில் கொஸாவாவில் வடக்கு பகுதியில் செர்பியர்களுக்கு தனியாக போலீசும், நீதிமன்றமும் நிறுவப்படும். ஆனால், அவர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது. முன்னர் செர்பியர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதில் தோல்வியடைந்ததால் உடன்படிக்கையில் கையெழுத்திட முடியாது என்று செர்பியாவின் துணை பிரதமர் அலெக்ஸாண்டர் வூஸிச் அறிவித்திருந்தார்.ஆனால், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் பேரில் செர்பியா உடன்படிக்கையில் கையெழுத்திட சம்மதித்தது. நேட்டோவின் தலைமையகம் அமைந்துள்ள ப்ரெஸ்ஸல்ஸில் வெள்ளிக்கிழமை இரு நாடுகளின் பிரதமர்கள் இடையே உடன்படிக்கை தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டது.

      செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த கொஸாவா பல வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியது.27 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஸ்பெயின், க்ரீஸ், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சைப்ரஸ் ஆகிய நாடுகள் கொஸாவாவை அங்கீகரிக்கவில்லை.செர்பியாவும் கொஸாவாவை அங்கீகரிக்கவில்லை.கொஸாவாவில் வாழும் சிறுபான்மையினரான செர்ப் வம்சா வழியைச் சார்ந்தவர்களும் அல்பேனியா பெரும்பான்மையினரை ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

     கொஸாவாவின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேரும் அல்பேனியர்கள் ஆவர். ஐக்கிய நாடுகள் அவை பொதுச் செயலாளர் பான் கீ மூனும், அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையை வரவேற்றுள்ளனர். இந்த உடன்படிக்கையை கண்டித்து நூற்றுக்கணக்கான செர்பியர்கள் தலைநகரான பெல்க்ரேடில் போராட்டம் நடத்தினர்.

0 comments:

Post a Comment