11 Apr 2013
யங்கூன்:தீவிர தேசியவாதிகளும், கலவரக்காரர்களுமான புத்த சன்னியாசி குழுக்கள் மியான்மரின் தலைநகரான யங்கூனில் தங்களது இனவிரோத நடவடிக்கைகளை வலுப்படுத்தியதை தொடர்ந்து அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
முஸ்லிம்களை தனிமைப்படுத்தவேண்டும்!அவர்களுடனான உறவை துண்டிக்கவேண்டும்! என்று பிரச்சாரம் செய்து வரும் ’969’ என்ற புத்த சன்னியாசி கும்பல்மியான்மரில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
யங்கூனுக்கு அருகே மத்திய மியான்மரில் உள்ள மிக்தீலா நகரத்தில் கடந்த மாதம் ஏராளமான முஸ்லிம்கள் புத்த சன்னியாசி தீவிரவாதிகளால் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற ராய்ட்டர்ஸ் செய்தியாளர் இதுத் தொடர்பான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதை தொடர்ந்து மிக்தீலாவில் நிலைமை கட்டுக்குள் அடங்கியுள்ளது. ஆனால், அப்பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பங்கள் பீதியில் ஆழ்ந்திருப்பதாகவும், எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என அச்சத்துடன் வாழ்வதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார்.
முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தீவிரமடைய போலீஸ் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்றும், தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்துப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஏப்ரல் 2-ஆம் தேதி ஒரு முஸ்லிம் மதரஸாவில் தீப்பிடித்து 13 மாணவர்கள் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மின்சார உபகரணத்தில் ஏற்பட்ட தீ தான் விபத்துக்கு காரணம் என்று மியான்மர் அரசு விளக்கம் அளித்தது. ஆனால், தீ விபத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.
இச்சம்பவத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் பயத்துடன் தூங்குவதாகவும், எப்பொழுதும் தாக்குதல் நடக்கலாம் என்ற பீதியில் ஆட்களை நிறுத்தியிருப்பதாக வியாபாரியான முஹம்மது இர்ஷாத் கூறுகிறார்.
’969’ என்ற பெயரிலான தீவிரவாத புத்த சன்னியாசி குழு முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அதேவேளையில் முஸ்லிம்களுக்குஆதரவாகவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் வன்முறைகளை எதிர்க்கவும் சில புத்த சன்னியாசிகள் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து எதிர்கட்சி தலைவரும், சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான ஆங் சாங் சூகி தீவிர மெளனம் பாலித்து வருகிறார். சூகியின் மெளனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அவர் வன்முறைகளை கண்டிக்கவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ தயாராகவில்லை.
0 comments:
Post a Comment