16 Apr 2013
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்குகளில் அம்மாநில முதல்வர் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து கொலைச் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை காரணம் காட்டி நரேந்திர மோடி தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாத கோரமான இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்தினர். இந்த இனப்படுகொலையின்போது அஹ்மதாபாத்தில் உள்ள குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி பகுதியில் நிகழ்ந்த கூட்டுப்படுகொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தக் கலவரத்தை முதல்வர் மோடி உள்ளிட்ட 59 பேர் தூண்டியதாக இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார்.அதைத் தொடர்ந்து, குல்பர்க் சொசைட்டி கூட்டுப்படுகொலை குறித்து விசாரிக்க சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை (எஸ்.ஐ.டி.) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி. “இந்தக் கலவரத்தில் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொடர்பு இல்லை’ என்று கூறி, அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தது.
இதை எதிர்த்து,ஸாகியா ஜாஃப்ரி, அஹ்மதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பை எஸ்.ஐ.டி. அல்லாத வேறொரு சுயேச்சையான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது மனுவை மாஜிஸ்திரேட் பி.ஜே.கணத்ரா விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து, நாள்தோறும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment