Tuesday, April 30, 2013

சமூகப் பொறுப்புடன் செயல்படுவார்களா ஜாதிய தலைவர்கள்?

 

     ஏப்ரல் 30/2013: டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி ரவுடிச அரசியலில் இறங்கி இருக்கிறது.
     டாக்டர் ஐயா மரம் விட்டு மரம் தாவுவது போல் கட்சி விட்டு கட்சி தாவி அரசியல் நடத்தி தனது மகன் அன்பு மணிக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தார். தமிழக அரசியலில் இரட்டை நாக்கு, பச்சோந்தி என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு வரலாறு படைத்தார்.



     இப்பொழுது இவரது ஜம்பிங் அரசியல் எடுபடவில்லை என்றதும் மீண்டும் பின்னோக்கி சென்று ஜாதி வெறி தூண்டி, மரம் வெட்டி கட்சி நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் போலும். இதை 25.04.13 அன்று இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மூலம் நிரூபித்திருக்கிறார்.

     வன்னிய சமூக மாநாடுகள், இளைஞசர் நிகழ்சிகள் நடத்துவதில் தவறில்லை. ஆனால் அதை நடத்த அவர் செய்த தயாரிப்புகள் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களின் செயல்பாடுகளோடு இவரை ஒப்பிட வைக்கிறது. தலித் மக்களோடு தங்களுக்குள்ள பிரச்னையை சந்திக்க தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 32 மாவட்டங்களுக்கு பயணம் சென்று பிராமண மற்றும் ஆதிக்க ஜாதி அமைப்புகளை, சங்கங்களை ஒன்று சேர்த்திருக்கிறார்.

     அரசியலுக்காக கூட்டு சேரலாம் தவறில்லை ஆனால் தலித் மக்களை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கெதிராக ஒரு படையை தயாரிப்பது போல் ஆதிக்க ஜாதி அமைப்புகளை ஒன்று சேர்த்திருப்பது ஆபத்தானது. மீண்டும் தமிழகத்தில் ஜாதிய வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கவே இது உதவும். ஜாதிய இயக்கங்களும், சங்கங்களும் தங்களது ஜாதி மக்களுக்கு சமூக சேவை செய்வதற்காகவே, அதைவிட்டு தங்களது ஜாதியில் உள்ள உழைக்கும், ஏழை எளிய மக்களை பயன்படுத்தி தங்களை வளர்த்து கொள்வதற்கு அல்ல.

     ராமதாஸ் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்களில் சிலர் மரக்காணத்தில் தலித் மக்கள் காலனிக்குள் சென்று வீட்டில் இருந்தவர்களை கண் மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்துள்ளனர். அப்பாவி தலித் மக்களின் குடிசைகளையும், இஸ்லாமியர்களின் கடைகளையும் தாக்கித் தீ வைத்ததுடன், அரசுப் பேருந்துகளையும் தனியார் வண்டிகளையும் கொளுத்தியுள்ளனர். மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.

      இந்த ஜாதிய தலைவர்கள் குறைந்தபட்சம் தங்களை நம்பி இருக்கும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்யா விட்டாலும் குறைந்தபட்சம் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். ராமதாஸோ, அவரது மகனோ எந்த பிரச்சனைகளையும் சந்திக்க போவதில்லை. இவர்கள் உருவாக்கும் ஜாதிய வேள்வியில் கருகப்போவது என்னவோ உழைக்கும் ஏழை மக்களே. இது ராமதாசுக்கு மட்டுமல்ல ஜாதிய, மத தலைவர்கள் என்று சொல்லி செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். இதுபோன்ற தலைவர்களுக்கு சமூக பொறுப்புண்டு அதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். thanks, sinthikkavum 

0 comments:

Post a Comment