Friday, April 12, 2013

பாதுகாப்பு அமைச்சகத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை நிறுத்தவேண்டும் – கேம்பஸ் ஃப்ரண்ட் !

                 12 Apr 2013 CAMPUS FRONT OF INDIA
 
      புதுடெல்லி:பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை நிறுத்தவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அப்துல் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:தீவிரவாத தாக்குதல் சதித்திட்ட வழக்கில் பங்கிருப்பதாக குற்றம் சாட்டி பெங்களூர் டி.ஆர்.டி.ஓவில் விஞ்ஞானியாக பணியாற்றிய இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை பணியில் இருந்து நீக்கினர். பின்னர் அவர் குற்றவாளி இல்லை என்று தெளிவான பிறகும் மீண்டும் பணியில் சேர்க்கவில்லை.
 
      தேசிய பாதுகாப்பு அகாடமியில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் அன்வர் அலி மீது தீவிரவாத குற்றம் சுமத்தி பணியில் இருந்து நீக்கிவிட்டு, குற்றவாளி அல்ல என்பது நிரூபணமான பிறகும் மீண்டும் பணியில் அவரை சேர்க்கவில்லை. இவை இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. அதே வேளையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளியான ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தற்போதும் சம்பளமும், இதர ஆதாயங்களும் அளித்து வருகிறது. முஸ்லிம்களை தீவிரவாதி்களாக சித்தரிப்பதற்கு காரணம், பாதுகாப்பு அமைச்சகத்தில் ஊருடுவியுள்ள ஓரவஞ்சனையும், சமூக விரோத மனப்பாண்மையுமாகும். குற்றமற்றவர் என்று விடுதலைச் செய்யப்பட்ட பிறகும் பணியில் சேர்க்காதது ஜனநாயகத்திற்கும், மதசார்பற்ற கொள்கைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். இஜாஸ் அஹ்மதையும், டாக்டர் அன்வர் அலியையும் வெகு விரைவில் பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் எடுக்கவேண்டும்.
 
     குறிப்பிட்ட மதப்பிரிவினரும், சமுதாயமும் இவ்வாறு குறிவைத்து தாக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு அமைச்சகத்தில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்தில் அரசு தலையிடாவிட்டால் தேச முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக போராட்டம் நடத்தப்படும். 2003-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக டாக்டர் அன்வர் அலியை போலீஸ் கைதுச் செய்தது. மும்பை ஆர்தர் சாலை சிறையில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றமற்றவர் என்று டாக்டர் அன்வர் அலி விடுவிக்கப்பட்டார். போலீஸ் கூறுவதைத்தான் பெரும்பாலான ஊடகங்கள் அச்சடிக்கின்றன. இதுத்தொடர்பாக ஊடகங்கள் விசாரணையும் நடத்துகின்றன. ஆனால், நிரபராதிகள் விடுவிக்கப்படுவது குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இவ்வாறு அப்துல் நாஸர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment