13 Apr 2013
புதுடெல்லி:தடா அல்லது அதுபோன்ற சில சட்டங்களின் கீழ் பதிவுச்செய்யப்பட்ட வழக்குகளில் கருணை மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் மரணத்தண்டனையை குறைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1993-ஆம் ஆண்டு டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைமையகத்தில் கார்க் குண்டுவெடிப்பின் மூலம் ஒன்பது பேரை கொலைச் செய்த வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்தர்பால் சிங் புல்லரின் மனுவை நிராகரித்துவிட்டு நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. புல்லரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய அடங்கிய அமர்வு, “”கருணை மனு மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்கமுடியாது என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்குரைஞர்கள் ராம்ஜேத்மலானி, அந்தி அர்ஜுனா ஆகியோரும், மனுதாரரின் சார்பில் வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசியும் வாதங்களை முன்வைத்தனர். அப்போது, “கருணை மனு மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர் தாமதம் செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புல்லர், மன ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். தனது வாழ்வு குறித்து அச்சத்துடன் சிறையில் புல்லர் கழித்த நாட்கள் மரணத்தை விட மிகவும் கொடுமையான தண்டனைக்கு ஒப்பாகும்’ என்று வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:தடா அல்லது அதுபோன்ற சில சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்போது அந்த வழக்கை, சொத்துப் பிரச்னைக்காக கொலை செய்தல் போன்ற சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. பயங்கரவாதிகள் இழைக்கும் குற்றங்கள் அப்பாவி மக்களைக் குறிவைத்து நாட்டுக்கு எதிராக நடத்தப்படுபவையாகும். துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட பெருமளவில் உயிர் சேதத்தை விளைவிக்கும் ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலில் ஈடுபடும்போது மனித உயிர்களின் மதிப்பை பயங்கரவாதிகள் உணருவதில்லை. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அதைக் குறைக்க குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை மேற்கோள்காட்டி அவர்கள் முறையிடுகின்றனர். இது முரண்பாடாக உள்ளது. கருணை மனு மீது முடிவு செய்வதில் சில காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. ஆனால், கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் எடுத்த முடிவு மீது கேள்வி எழுப்ப, மனுதாரர் முன்வைக்கும் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
புல்லரின் கருணை மீது 2005 மே முதல் 2011 மே வரை ஆறு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவில்லை. குடியரசுத் தலைவர் செயலகத்துக்கு அரசியல், சமூக அமைப்புகள், தனி நபர்கள், வெளிநாடுகள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்ததால் அவரது கருணை மனு மீது முடிவு எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கருணை மனுக்கள் குறித்து குடியரசுத் தலைவர் செயலகத்துக்கு நினைவூட்ட மத்திய உள்துறை தவறி விட்டது. 2011 ஏப்ரல், மே மாதங்களில் கருணை மனுக்கள் மீது முடிவு செய்ய காட்டிய ஆர்வத்தை சம்பந்தப்பட்ட துறைகள் 2005-ம் ஆண்டிலேயே காட்டியிருந்தால் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். கருணை மனுக்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் செயலகமும், மத்திய உள்துறையும் போதிய அக்கறை காட்டவில்லை என்ற தோற்றம் ஏற்படுகிறது.1999 முதல் 2011-ம் ஆண்டுவரை கருணை மனுக்கள் நிலுவையில் இருந்த நிலையை வைத்து இது தெரிகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருணை மனுக்கள் மீது விரைவில் முடிவு செய்து தேவையற்ற தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது, நம்புகிறது” என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“கருணை மனு மீது முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது; எங்கள் அதிகாரம் வரம்புக்கு உள்பட்டது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய அமர்வு கூறியது. புல்லரின் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் “”கருணை மனு மீது முடிவு செய்ய, அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கும், 161-வது பிரிவின்படி ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவை மறுஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது. குடியரசுத் தலைவரும், ஆளுநரும் வழக்கை முழுமையாக ஆராயாமல் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக நீதிமன்றம் கருதுமேயானால் அப்போது நீதிமன்றம் தலையிடலாம்” என்று கூறினர்
0 comments:
Post a Comment