Thursday, April 25, 2013

சி.பி.ஐ அறிக்கையில் தலையீடு:மன்மோகன் சிங்கிற்கு எதிராக எதிர்கட்சியினர்!

                      24 Apr 2013 Parliament_PTI_NEW
 
     புதுடெல்லி:நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல, லடாக் எல்லைப் பகுதியில் சீனப் படையினர் ஊடுருவியதாக சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்தும், மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறியும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.
 
     அதையடுத்து, மக்களவை அலுவல் நண்பகல் 12 மணிக்குப் பிறகும், மாநிலங்களவை அலுவல் பிற்பகல் 2 மணிக்குப் பிறகும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது.அப்போது, பஞ்சாயத்துகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு புதன்கிழமையுடன் (ஏப்ரல் 24) இருபது ஆண்டுகள் நிறைவு பெறுவதை மீரா குமார் நினைவுகூர்ந்தார். கேள்வி நேரம் தொடங்கியதும், “நிலக்கரி ஊழல் விவகாரத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள், கணேஷ் சிங் தலைமையில் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இந்த நிலையில், “மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை; தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அவமானகரமானது’ என்று கூறி, அதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுவென்டு அதிகாரி தலைமையில் கோஷமிட்டனர்.
 
     இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இடதுசாரி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்கள் மம்தா பானர்ஜி ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று குற்றம்சாட்டினர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலங்கானா பகுதி உறுப்பினர்கள், தனி தெலங்கானா மாநிலம் ஏற்படுத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அவையின் மையப் பகுதியில் நின்றனர்.
இந்த நிலையில், லடாக் எல்லையில் சீனப் படையினர் ஊடுவியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து விவாதிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், கேள்வி நேரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அலுவல் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மூத்த உறுப்பினர் மு. தம்பிதுரை தலைமையில் அவை நடவடிக்கை நடைபெற்றது. இருப்பினும், பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அதையடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 24) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை என்பதால், மக்களவை நடவடிக்கை வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
     மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் கூடிய போது, நிலக்கரி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதை தொடர்ந்து அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைப்பு: மூன்றாவது முறையாக அவை கூடிய போது நிலக்கரி ஊழல் விவகாரம், தில்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஆகியவற்றைக் கண்டித்து பாஜக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
     இதையடுத்து, அவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் பதவி விலக மாட்டார் என உறுதியாக தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நிலக்கரி சுரங்கம் ஒதுக்கிய விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பாஜக உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அதில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கிய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர்.
 
     இதில் தொடர்புடைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமார் ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும் என மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே சென்று கோஷமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியில் மக்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டம் அவசரமாக கூடியது. அதில் பேசிய சோனியா காந்தி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக மாட்டார் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment