21 Apr 2013
புதுடெல்லி:தில்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பீகார் மாநிலம், முஸாபர்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (22) என்ற நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. மகளிர் அமைப்புகள், பா.ஜ.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் மகளிர், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு விரைவாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், டெல்லி மாநகர காவல் துறை ஆணையரை பதவி நீக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக டெல்லி மாநகர துணை ஆணையர் (கிழக்கு) பிரபாகர் சனிக்கிழமை கூறியது: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பிகார் மாநிலம், முஸாபர்பூரை அடுத்த சிக்னூட்டா கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மனோஜ் குமாரை (22) சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கைது செய்தனர்.
குமாரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சம்பவத்துக்குப் பிறகு சிறுமி இறந்துவிட்டதாகக் கருதி தில்லியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பிகார் மாநிலம் முஸாபர்பூரிலுள்ள சொந்த ஊருக்கு அவர் வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இனிமேல்தான் விசாரிக்க வேண்டும் என்றார் பிரபாகர். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் பெற்றோரை மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் சனிக்கிழமை சந்தித்து விசாரித்தார்.மருத்துவர்களையும் சந்தித்த அமைச்சர், சிறுமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே.சர்மா கூறுகையில் சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் சுயநினைவுடன் உள்ளார். அவரது உடல் இயக்கங்கள் அனைத்தும் வழக்கமாக இயங்குகின்றன. சிறுமியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்’ என்றார்.
0 comments:
Post a Comment