Sunday, April 14, 2013

ஆக்கிரமிப்பால் சுருங்கும் தாமிரபரணி




தமிழகத்துக்கு முற்றிலும் உரிமையான ஒரே ஜீவநதி யான தாமிரபரணி
தொடங் கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை ஆக்கிரமிப்பால்
ஒடுங்கி ஓடுகிறது. நெல்லை மாநகராட்சியின் கொக்கிரகுளம், கைலாசபுரம்,
சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகள் ஆற்றுக்குள்ளும்
நீண்டுள்ளன. இதனால் வெள்ளக்காலங்களில் அங்கு குடியிருப்போர்
பாதிக்கப்படுவது தொடர்கதையானது.


இதனால் கடந்த காலங்களில் 3 முறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வருவாய்
துறையால் மேற்கொள்ளப்பட்டது.ஆனாலும், போதிய கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. கடந்த 2010 வரை கருப்பந்துறையிலும் வண்ணார்பேட்டையிலும் ஓரிரு செங்கல் சூளைகள் மட்டுமே இருந் தன. தற்போது இரு இடங்களிலும் 10க்கும் மேற்பட்ட சூளைகள் உள்ளன.இவற்றுக்கு தேவையான மண்ணை அருகிலேயே எடுக்கவும், ஆற்றங்கரை மரங்களை வெட்டி எரிக்க வும் செய்வதால் இயற்கை வளம் சூறையாடப்படுகிறது.

இதற்கு அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவாக
இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். ஆற்றங்கரை
மாநகர மக்களுக்கு திறந்தவெளி கழிப்பிடமாக இருந்ததால் அங்கு பன்றி
வளர்ப்பது எளிதாக இருந் தது. இதனால் 20க்கும் மேற்பட்ட
பன்றிக்கொட்டில்கள் அங்கு இருந்தன. மாநகராட்சியினர் பன்றி வளர்ப்பதை
தடை செய்தும் இன்னமும் ஓரிரு இடங்களில் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

மாநகராட்சி பகுதியில் ஆற்றுக்குள் நிறைய தோட்டங்கள் உள்ளன. அவற்றில் கீரை, காய்கறி செடி, கொடிகளும், தென்னை போன்ற மரங்களும் நட்டு ஜோராக வளர்க்கின்றனர். தோட்டங்கள் அமைத்த இடங்களை மட்டுமின்றி, அமைக்காத மற்ற இடங்களை யும் அவரவர்கள் பிடித்துப்போட்டு சொந்த நிலம் போல் பட்டா போடாத குறையாக அனுபவித்து வருகின்றனர். இதை பொதுப்பணித்துறை கண்டுகொள்வதே இல்லை.

கைலாசபுரத்தில் கடந்த ஆண்டு மாநகர போலீசார் முயற்சியால் வருவாய்
துறையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு ஆகற்றும் நடவடிக்கையின்போது
மாநகராட்சி கழிப்பறை உள்ளிட்ட பொதுக்கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன. புதிதாக கோயில் கட்டியதை அதிகாரிகள் கண்டித்தனர். ஆனால், வண்ணார்பேட்டை ஆற்றுக்குள் கடந்த ஒரு மாதத்துக்குள் புதிய கோயில் ஒன்று தென்னந்தட்டிகளால் அமைக்கப்பட்டுள்ளது.கோயில்கள், சமாதிகள் அமைத்தால் அதிகாரிகள் கண்டு கொள்ளமாட்டார்கள்
என்று கருதி இத்தகைய ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகின்றனர்.

தாமிரபரணி கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மீக தலங்கள் உள்ள நிலையில் மேலும் ஆற்றுக்குள் கோயில்கள் அமைக்க தேவையில்லை என்று ஆன்மீகவாதிகளே கூறுகின்றனர்.இதேபோல் வண்ணார்பேட்டை ஆற்றுக்குள் புதிய வீடுகள் சில கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கைலாசபுரத்தில் கடந்த ஆண்டு இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் பலவற்றுக்கு தீர்வை, மின் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றவேண்டிய அரசுத்துறைகளே அவற்றை அங்கீகரித்ததால் வருவாய் துறை நடவடிக்கையின்போது குழப்பம் விளைந்தது.எனவே, இனியாவது ஆறு, நீர்நிலைகளுக்குள் புதிய ஆக்கிரமிப்புகள் நிகழும்போதே அரசு அதிகாரிகள் விழித்துக்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நன்றி
தினகரன்

0 comments:

Post a Comment