Monday, November 21, 2011

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பம்..?


சிரிய தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஆளும் பாத் கட்சி அலுவலகம் மீது நேற்று சிரிய விடுதலை ராணுவம், ஆர்.பி.ஜி., ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அதிபர் அசாத் நேற்று அளித்த பேட்டியில், இந்த ரத்தக் களறியான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர். சிரிய ராணுவம் மூலம் அவர்களை அசாத் அடக்கி வருகிறார். ஆனால், ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதில் இருந்து விலகி, "சிரிய விடுதலை ராணுவம்' என்ற பெயரில், சிரிய ராணுவம் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதிகாலைக்கு சற்று முன், டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான மஜ்ராவில் உள்ள ஆளும் பாத் கட்சியின் அலுவலகம் மீது, சிரிய விடுதலை ராணுவம், ஆர்.பி.ஜி., ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த வகை ராக்கெட்டுகளை தனிநபர் தனது தோளில் இருத்தியபடியே ஏவலாம்.தலைநகரின் முக்கிய இடத்தில் சிரிய விடுதலை ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுவே முதன் முறை. இது தொடர்ந்தால், லிபியாவைப் போல சிரியாவிலும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.தாக்குதல் நடத்தப்பட்ட போது அக்கட்டடத்தில் யாரும் இல்லை என்பதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இத்தாக்குதல், அதிபருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என சிரிய விடுதலை ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் அசாத் கூறியதாவது:இந்தப் பிரச்னை தொடரத் தான் செய்யும். சிரியா மீதான நெருக்கடி மேலும் அதிகரிக்கும். ஆனால், இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் சிரியா தலைவணங்கி விடாது.மற்ற சிரிய மக்களைப் போலவே, எனது நாட்டினர் ஒவ்வொருவரும் ரத்தம் சிந்தும் போது எனக்கு வேதனையாகத் தான் இருக்கிறது.  ஆனால், ஒரு அதிபர் என்ற முறையில், இந்த ரத்தம் சிந்தும் போக்கை தடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.அரபு லீகில் இருந்து சிரியா விலக்கப்பட்டது சரியல்ல. அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசியல் அமைப்பிற்கான பார்லிமென்ட் தேர்ந்தெடுக்கப்படும். தேர்தல் தான், யார் அதிபராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.இவ்வாறு அசாத் தெரிவித்தார்.
source-yarlmuslim

0 comments:

Post a Comment