Wednesday, March 6, 2013

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் முறைகேடு! சி.ஏ.ஜி அறிக்கை!

6 Mar 2013
     புதுடெல்லி:மத்திய அரசின் ரூ. 52 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
     விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு 2008-ஆம் ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தின்படி 3 கோடியே 69 லட்சம் சிறு, குறு விவசாயிகளும், 60 லட்சம் பிற விவசாயிகளும் பயனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 52,516 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்திட்டம் தொடர்பான தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
    
    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரூ. 52 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கடன் தள்ளுபடியைப் பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலன் போய் சேரவில்லை.
 
    பெரும்பாலும் விவசாயக் கடன் பெறுவதற்கே தகுதியற்றவர்கள்தான் கடன் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தைக் கண்காணிக்க வேண்டிய மத்திய நிதியமைச்சகத்தின் ஒரு பிரிவான நிதிச் சேவைப் பிரிவு தனது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை. கடன் தள்ளுபடி பெற்றவர்களின் ஆவணங்களை ஆராய்ந்ததில், தகுதியற்ற பலர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளது தெரியவந்துள்ளது
 
    (கடன் தள்ளுபடி பெற்றவர்களில் 22 சதவீதம் பேரின் ஆவணங்களை சி.ஏ.ஜி. ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது).
 
     விவசாயம் சாராத பணிகளுக்காக கடன் பெற்றவர்களும் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்துள்ளனர். கடன் தள்ளுபடி பெறத் தகுதியுள்ள விவசாயிகள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக நுண் நிதி நிறுவனங்களுக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
 
    இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, வட்டிக்கான அபராதம், சட்ட நடவடிக்கைகளுக்கான கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை வங்கிகள் வசூல் செய்துவிட்டன. விதிமுறையின்படி இக்கட்டணங்களுக்கு அந்தந்த வங்கிகள்தான் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.
 
    கடன் தள்ளுபடி பெற விண்ணப்பித்த பலரின் ஆவணங்கள் போலியாகவோ அல்லது முறைகேடாக திருத்தப்பட்டோ உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், ஆடிட்டர்களை மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைப் பிரிவு விசாரிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment