Wednesday, April 10, 2013

போலி என்கவுண்டர்கள் நடக்காது என்பதை மத்திய அரசு உறுதிச் செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம்!

 10 Apr 2013
     புதுடெல்லி:போலி என்கவுண்டர் கொலைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் மிகவும்கவலை அடைந்துள்ளதாக நீதிபதிகளான அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் தெரிவித்தனர். நீதிபதி அஃப்தாப் ஆலம் கூறுகையில்:”காரியங்கள் இவ்வாறு நடக்கும்பொழுது இங்கே இருந்து என்ன பயன்?எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றுகிறது!’ என்று தெரிவித்தார். இழப்பீடாக பணத்தை வழங்கி பிரச்சனையை தீர்க்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
     மணிப்பூரில் போலி என்கவுண்டர் தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசு மூடி மறைப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் காலின் கான்ஸால்வ்ஸ் தெரிவித்தபொழுது நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது. மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் 1500க்கும் அதிகமான போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டி கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் முன்னர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
     சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து விசாரணை நடத்தவேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இதனைத் தொடர்ந்து 6 போலி என்கவுண்டர் படுகொலைகளை குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
     3 மாதங்கள் நடந்த நீண்ட விசாரணையில், ஆறு பேரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை குறித்து ராணுவம் கடுமையாக கவலை அடைந்துள்ளதாகவும், இந்த அறிக்கையை எதிர்ப்பதாகவும் மத்திய அரசு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், இந்த அறிக்கை சிறந்ததுஎன்றும், இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் அனுமதிக்கமாட்டோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

     இவ்விவகாரம் தொடர்பாக நிலைப்பாட்டை தெரிவிக்க தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தோஷ் ஹெக்டே அறிக்கையை குறித்து, பிரதமர் தலைமையிலான உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை விரைவில் விவாதிக்கும் என்று மத்திய அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
     ‘மத்திய அரசு மீது எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் காலின் கான்ஸால்வ்ஸ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். 2004-ஆம் ஆண்டு மனோரமா தேவி என்ற பெண்மணியை துணை ராணுவப் படையினர் பாலியல் வன்கொடுமை புரிந்து கொலைச் செய்த வழக்கின் அறிக்கையை மத்திய அரசு மூடி மறைக்கிறது. ஆகையால் அரசின் நிலைப்பாடு மாறாது என்று கான்ஸால்வ்ஸ் அவநம்பிக்கை தெரிவித்தார்.
 
     டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து மத்திய அரசு நியமித்தநீதிபதி வர்மா கமிட்டி, கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து விமர்சித்ததுடன், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கக்கூடாது என்று பரிந்துரைத்தது என்று கான்ஸால்வ்ஸ் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
     இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை மூன்று உறுப்பினர்களை கொண்ட பெஞ்சுக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் தெரிவித்தது.

0 comments:

Post a Comment