Sunday, March 10, 2013

பாலியல் குற்றங்கள் குறைய சமூகத்தின் மனப்பாண்மையில் மாற்றம் தேவை ! – நீதிபதி ஜே.எஸ்.வர்மா!

10 Mar 2013
 
     புதுடெல்லி:பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதை விட, நமது சமூகத்தின் மனப்பான்மையை மாற்றுவது மிகவும் முக்கியம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
     நீதிபதி வர்மா மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்துக்குப் பின், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றைத் தடுப்பது தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்வதற்காக அரசு குழு அமைத்தது. அந்த குழுவுக்கு தலைமை ஏற்றவர் ஆவார்.
 
     மும்பையில் நேற்று(சனிக்கிழமை) இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த பெண்கள் உரிமை தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு நீதிபதி ஜே.எஸ்.வர்மா உரையாற்றினார்.
 
அப்பொழுது அவர் கூறியது:
 
     பெண்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவது என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதை விட, நமது சமூகத்தின் மனப்பான்மையை மாற்றுவது மிகவும் முக்கியம்.
 
     சமூகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அவர்கள் அமைதி வழியில் நடத்தி வரும் போராட்டங்களும் வரவேற்கத்தக்கது. தில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர், இளைஞிகளை போலீஸார் தாக்கியதை பார்த்தேன். அப்போதும் அவர்கள் வன்முறையில் இறங்காமல் நிதானம் காட்டி அமைதியாகப் போராடினார்கள். அது காந்திய வழிப் போராட்டமாக இருந்தது. அந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமையடைந்தேன்.
 
     இது போன்ற இளைஞர்களால் அமைக்கப்படும் அமைப்புகள் எழுச்சி பெறும். எனெனில் அவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை. டெல்லி பலாத்கார சம்பவத்துக்குப் பின் டெல்லி மாநில போலீஸாரை அரசு புகழ்ந்தது நெருடலை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை அவர்கள் விரைவில் பிடித்துவிட்டார்கள் என்று அதற்கு காரணம் கூறப்பட்டது. ஆனால், பாலியல் பலாத்கார சம்பவம் நிகழாமல் அல்லவா போலீஸார் தடுத்திருக்க வேண்டும்.
 
     மேலும் பலாத்கார சம்பவத்துக்குப்பின் போலீஸார் அந்தப் பெண்ணை நடத்திய விதம் மிகவும் மோசமானது. ஏற்கெனவே கொடூரத்தை சந்தித்த அந்த மாணவி, காவல் நிலையத்திலும் மனரீதியாக துன்புறத்தப்பட்டுள்ளார் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment