Thursday, October 6, 2011

போர்ச்சுகல் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசு மேல்முறையீடு.


புதுடெல்லி : மும்பை தாதா அபு சலீம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதை போர்ச்சுகல் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து போர்ச்சுகல் உச்ச நீதிமன்றத்தில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் தாதா அபு சலீம். போர்ச்சுகல் நாட்டில் பதுங்கி இருந்த அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முறைப்படி வேண்டுகோள் வைக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை சுமத்தினால் நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று போர்ச்சுகல் கூறியது. இதனால், அபு சலீம் மீது 8 வழக்குகள் மட்டுமே தொடரப்படும், அவனுக்கு 25 ஆண்டுக்கு மேல் தண்டனை கிடைக்காது என்று இந்தியா வாக்குறுதி அளித் தது. இதை தொடர்ந்து, அபு சலீமும் அவனது காதலியான நடிகை மோனிகா பேடியும் கடந்த 2005ம் ஆண்டு போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலீம் மீது புதிய குற்றச்சாட்டை மும்பை தடா நீதிமன்றம் சமீபத்தில் பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கலாம். இதனால், போர்ச்சுகல் உயர் நீதிமன்றத்தில் அபு சலீம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், Ôஇந்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறி மரண தண்டனை விதிக்க வழி செய்யும் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. எனவே, என்னை நாடு கடத்தியதை ரத்து செய்ய வேண்டும்Õ என்று கூறியிருந்தான்.

இதை ஏற்றுக் கொண்ட போர்ச்சுகல் உயர் நீதிமன்றம், இந்தியாவுக்கு அபு சலீம் நாடு கடத்தப்பட்டதை கடந்த செப்டம்பர் 19ம் தேதி ரத்து செய்தது. இந்த நிலையில், போர்ச்சுகல் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக போர்ச்சுகல் உயர் நீதிமன்றம் தவறான கண்ணோட்டத்துடன் தீர்ப்பு அளித்துள்ளது.

புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், ஏற்கனவே உள்ள வழக்குகளைவிட அதிக தண்டனை கிடைக்காது என்று உறுதி கூறுகிறோம். அபு சலீமின் நாடு கடத்தலை ரத்து செய்தது சரியல்ல. உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்Õ என்று கோரப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

0 comments:

Post a Comment