"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாக்., வீரர்கள் பலியாயினர்.இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ மன்னிப்பு:நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், "எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது' என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராணுவம் காட்டம்:ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன.
கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாக்., அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.
யார் முதலில் தாக்கியது?அதேநேரம், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கார்டியன்' போன்ற பத்திரிகைகளில், முதன் முதலில் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தலிபான்களாக இருக்கலாம் எனக் கருதித் தான் நேட்டோ பதிலடி கொடுத்ததாகவும், தாக்குதல் குறித்து பாக்., ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏன் 2 மணி நேரத் தாக்குதல்?இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்பாஸ் கூறியதாவது:"இது ஒரு சாக்கு போக்கு. அப்படி பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு எத்தனை பேர் பலியாயினர், சேதம் என்ன என்பது பற்றி விவரங்களை அவர்களால் தரமுடியுமா? தாக்குதல் நடந்த நேரத்தில், சலாலா சாவடியில், வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேட்டோ தாக்குதல் துவங்கிய போதே, அதை நிறுத்தும்படி அவர்களுக்கு பாக்., ராணுவத் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
அதையும் மீறித் தான் இரண்டு மணி நேரமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் ஜெட் ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன?இவ்வாறு அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், நேட்டோ தாக்குதல் குறித்து தனித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இனி எக்காரணம் கொண்டும், நேட்டோவுக்கு எரிபொருள் வினியோகிக்கப் போவதில்லை என பாக்., எரிபொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பாக்., முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான, இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
yarlmuslim