தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
அத்துடன், குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத் தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலான முழு விவரங்களையும் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.
இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.
முஸ்லிம் அமைச்சர்களுடனும், முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடனும் இது தொடர்பில் அரபு நாடுகளின் தூதுவர்கள் தனித்தனி சந்திப்புகளை மேற் கொண்டு விவரங்களைப் பெற்றுவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை, தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு இலங்கையிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் கடும் கண்டனமும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டே தமது கண்டனத்தை இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசல் தாக்கப்படுவது அபூர்வமான நிகழ்வென சுட்டிக்காட்டியிருக்கும் தூதுவர்கள், இலங்கையில் இவ்வாறான இதையொத்த சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது தம்மைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் கலாசார விழுமியங்கள், இஸ்லாமியக் கடமைகளைச் சரிவர மேற்கொள்வதில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல என்றும் அத்தூதுவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்புள்ளை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டும் உரிய பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாமையானது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்றும் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஈரானியத் தூதுவர் அவசர கடிதமொன்றை பிரதமர் தி.மு. ஜயரத்னவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை முஸ்லிம்களின் கலாசாரம் மற்றும் வழிபாட்டு விழுமியங்களுக்குத் தனித்துவமும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென ஈரான் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முஸ்லிம்களின் கலாசார, வணக்க வழிபாடுகள் தனித்துவம் மிக்கவை. இதனை உறுதிசெய்து பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பும் கடமையுமாகும் என்றும் அக்கடிதத்தில் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் தூதுவரால் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தின் பகுதிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர் அலவி மௌலானா மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
thanks to qahtaninfo
0 comments:
Post a Comment