பெங்களூர்: யாரிடமும் பதவிப்பிச்சைக் கேட்கப்போவதில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
சுரங்க ஊழல் பிரச்சனை காரணமாக பாஜக மேலிடத்தின் உத்தரவால் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எதியூரப்பா தற்போது மீண்டும் முதல்வராக முயற்சி செய்து வருகிறார். அவர் தனக்கு மீண்டும் முதல்வர் பதவியை அளிக்குமாறு கட்சி மேலிடத்தை கேட்டுப்பார்த்தார், மிரட்டிப் பார்த்தார் எதுவும் நடக்கவில்லை.
பதவி குறித்து பேச டெல்லி செல்வதாக இருந்த எதியூரப்பாவை தனது பயணத்தை ரத்து செய்யுமாறு பாஜக மூத்த தலைவர்கள கட்டாயப்படுத்தினர்.
இந்நிலையில் கர்நாடக ராஜ்ய சவிதா சமஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதியூரப்பா பேசியதாவது,
நான் யாரிடமும் முதல்வர் பதவி கொடுங்கள் என்று பிச்சை கேட்கப் போவதில்லை. எனது ரத்தம் கொதிக்கிறது. இனி வரும் நாட்களில் எதியூரப்பா யார் என்பதை காண்பிப்பேன். நான் நம்பியவர்களே என்னை ஏமாற்றிவிட்டனர். சூழ்ச்சி செய்து என்னை பதவி விலகச் செய்து எனது முதுகில் குத்திவிட்டனர். காலம் அவர்களுக்கு பாடம் புகட்டும்.
கடந்த சில நாட்களாக நான் அமைதியாக இருந்தேன். எனது அரசியல் எதிரிகள் தங்கள் திட்டங்களில் வெற்றி காண முடியாது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. இருப்பினும் இங்கு வந்துள்ளேன். நான் செய்யாத குற்றத்திற்காக என்னை சிறையில் அடைத்தார்கள். அதற்காக நான் கண்ணீர் வடிக்கவில்லை. எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வேன் என்றார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment