5 Mar 2013
டெல்லி:மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை(AFPSA) வாபஸ் பெறக்கோரி, மணிப்பூரில் கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2006ல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஷர்மிளா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில் கடந்த 2000ம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஷர்மிளா சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஷர்மிளா, இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். மூக்கு வழியே அவருக்கு திரவு உணவு செலுத்தப்படுகிறது.
தனது கோரிக்கையை வலியுறுத்தி 2006ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. நேற்று இவ்வழக்கில் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக, மணிப்பூரில் இருந்து டெல்லி வந்த ஷர்மிளா, நீதிமன்றத்தில் ஆஜரானார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று அரசு தரப்பில் சாட்சிகள் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த ஷர்மிளா, ‘‘ஆயுதப்படை சிறப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் சார்பில் 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன். எனது போராட்டம் வன்முறையை தூண்டவில்லை. காந்திய வழியில் அமைதியான முறையில் போராடி வருகிறேன். ஜனநாயக நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே போராடி வருகிறேன். அரசும் ராணுவமும் கூட்டாக சதி செய்து மக்களை ஏமாற்றுகின்றன. எங்களுக்கு அமைதியும் நீதியும் வேண்டும்’’ என்றார். thanks, thoothu
0 comments:
Post a Comment