Tuesday, June 7, 2011

ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி

Rwanda Army Chief
அருஷா (தான்சானியா): ருவாண்டாவில் நடந்த வரலாறு காணாத இனப்படுகொலைக்குக் காரணமான முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை விதித்தவர் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா.

ருவாண்டாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை சம்பவம் தொடர்பாக ஐ.நா. சர்வதேச போர்க்குற்ற டிரிப்யூனல் விசாரித்து வந்தது. இந்த கோர்ட்டுக்கு இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அசோக டிசில்வா தலைவராக இருந்தார். இந்த நீதிமன்றம் தற்போது ருவாண்டா ராணுவத்தின் மாஜி தலைமைத் தளபதி அகஸ்டின் பிஸிமுங்குவுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர் தவிர பிரான்காய்ஸ் சேவியர் சுவானமயி மற்றும் இன்னொசன்ட் சகாஹுடு ஆகியோருக்கு தலா 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தலைவர் அகஸ்டின் டின்டிலியிமனா என்பவரும் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்தது. இருப்பினும் அவர் ஏற்கனவே சிறையில் நீண்ட காலம் இருந்ததால் அவரை விடுவிக்க சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

1994ம் ஆண்டு ருவாண்டாவில் பெரும் இனக் கலவரம் வெடித்தது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அது நீடித்தது. இந்த கால கட்டத்தில் ருவாண்டாவே ரத்தக்களறியானது. கிட்டத்தட்ட 8 லட்சம் டுட்சி இனத்தவரும், நடுநிலையுடன் கூடிய ஹூடு இனத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ருவாண்டாவை ஆட்சி செய்து வந்தது ஹூடு இனத்தவர்கள் ஆவர். இதனால் டுட்சி இனத்தவர்களை அழிக்கும் நோக்கில் கொலை வெறியாட்டம் ஆடியது ராணுவம். இந்த இனப்படுகொலையை தலைமையேற்று நடத்தினார் பிஸிமுங்கு.

1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தலைநகர் கிகாலி அருகே ருவாண்டா முன்னாள் அதிபர் ஜூவினல் ஹபியாரிமானா பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அதிபர் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் வெடித்தது. 

100 நாள் நடந்த ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான வழக்கை விசாரிக்க தான்சானியாவில் சர்வதேச கோர்ட் நிறுவப்பட்டது. முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அசோக டிசில்வாவைத் தலைவராக கொண்ட கோர்ட் அமைக்கப்பட்டது.

இந்தக் கோர்ட்டில், அசோக டிசில்வா தவிர தக்ரிட் ஹிக்மத் மற்றும் சியோன் கி பார்க் ஆகியோரும் நீதிபதிகளாக செயல்பட்டனர்.

கிட்டத்தட்ட 250 சாட்சியங்களை விசாரித்த இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது.

2002ம் ஆண்டு அங்கோலாவில் வைத்து பிஸிமுங்கு கைது செய்யப்பட்டார். வீடு வீடாக போய் டுட்சி இனத்தவரை கும்பல் கும்பலாக கொலை செய்யுமாறு அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹூடு இனத்தவர்களுக்கு உத்தரவிட்டது இந்த பிஸிமுங்குதான். குறிப்பாக ஒரு கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டுட்சி இனத்தவரை நிற்க வைத்து அத்தனை பேரையும் ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தான் இந்த பிஸிமுங்கு.

மேலும் ருவாண்டா பிரதமர் அகாதே விலிங்கியிமானாவையும் கொல்ல பிஸிமுங்கு உத்தரவிட்டான். அப்போது பிரமரைப் பாதுகாக்க ஐ.நா. அனுப்பியிருந்த படையில் இடம் பெற்றிருந்த ஏழு பெல்ஜியம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ருவாண்டாவிலிருந்து ஐ.நா. அமைதி காக்கும் படை வெளியேறியது.

ராஜபக்சே கும்பலுக்கு எப்போது தண்டனை?

இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து உலகம் முழுவதும் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் தமிழர்களை வேட்டையாடிய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக அப்போது இருந்த சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும், அவர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கடும் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இதே நிலைமை ராஜபக்சே கும்பலுக்கும், பொன்சேகாவுக்கும் வர வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 comments:

Post a Comment