Thursday, June 30, 2011

ஐ.எம்.எப்., தலைவராக லகார்டு தேர்வு


வாஷிங்டனில் உள்ள, சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) முதல் பெண் தலைவராக, பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை 5ம் தேதி பதவியேற்கும் லகார்ட், ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ் கான், நியூயார்க்கில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால், பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவருக்கான தேர்தலில், பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட்டுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஐ.எம்.எப்., தலைவராக, 55 வயதான கிறிஸ்டைன் லகார்ட், அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். ஐ.எம்.எப்., அமைப்பின் டேவிட் ஹாவ்லி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். "என் மீது நம்பிக்கை வைத்து, ஐ.எம்.எப்., தலைவராக உறுப்பு நாடுகள் தேர்வு செய்திருப்பதில் சந்தோஷம் அடைகிறேன்' என, லகார்ட் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் நிக்லோஸ் சர்கோசி, "லகார்ட்டுவின் வெற்றி, பிரான்சுக்கு கிடைத்த வெற்றி' என கூறியுள்ளார். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் டிமோதி கெய்த்னர், "உலகமே பொருளாதார சிக்கலில் சிக்குண்டு இருக்கும் போது, லகார்ட்டுவின் தனித்துவம் வாய்ந்த அறிவு மற்றும் அனுபவம் சிறந்த நிர்வாகியாக செயல்பட உதவும்' என்றார். ஐ.எம்.எப்., தலைவராக தேர்வான லகார்ட், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "பொருளாதார சிக்கலில் இருந்து மீள, கிரீஸ் நாடு உடனடியாக சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு அனுமதி அளித்தால், முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கானை சந்திக்க விரும்புகிறேன். ஐ.எம்.எப்., மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றி ஸ்ட்ராஸ் கான் என்ன கூறுகிறார் என, தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்றார். பிரான்ஸ் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும் முன், அந்நாட்டின் வர்த்தக அமைச்சராக இரண்டு ஆண்டுகள் லகார்ட் பதவி வகித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன், நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் சம்பளம் பெறும் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமும் உண்டு.

ஐ.எம்.எப்.,பின் பணி

* சர்வதேச வர்த்தகம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு உதவுவது.
* நாடுகளின் கரன்சி பரிவர்த்தனை மதிப்புகளை கண்காணிப்பது.
* கடன் பெற்ற நாடுகள் திரும்ப செலுத்துகின்றனவா என்பதை கண்காணிப்பது.
* உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது.

0 comments:

Post a Comment