Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வியும் தமிழக அரசின் வறட்டு கௌரவமும்





 முதல் கோணல் முழுவதும் கோணல் என்பது போல அமைந்துள்ளது , தமிழக அரசின் அறிவிப்பு , சமச்சீர் கல்வி சட்ட திருத்தம் - 3க்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ள நிலையில், இந்த தீப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால்,தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.


இத சமச்சீர் கல்வியை எதிர்த்து போடப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சுயவிளம்பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பாடபுத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிருபிக்க வில்லை. சமச்சீர் கல்வி பாடதிட்டம் குறைபாடு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்திருத்தம் அரசியல் சாசனம் அளிக்கும் உரிமையை பறிப்பதாக உள்ளதா? இந்த ஐகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை செல்லாததாக மாற்றுகிறதா? என்பதை பரிசீலிக்க வேண்டும். இதற்கு விரிவாக அரசிடம் பதில் பெற வேண்டும். அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்த பிறகு வழக்கை விரிவாக விசாரித்தால் தான் முடிவு எடுக்க முடியும். இதற்கிடையில் என்ன செய்யலாம் என்பது தான் தற்போதைய கேள்வி எழுந்துள்ளது?  எனவே தான் திருத்த சட்டத்திற்கு தடைவிதிகிறோம் என்று தீர்ப்பு வழங்கினர் .

ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு இதை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார், ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது ஒரு மாதம் கோடை கால விடுமுறையில் இருப்பதால் (இந்த நாட்டில் இந்த கோடை காலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா, நாட்டில் எத்தனையோ லட்சோப லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த மாதிரியான விடுமுறைகள் தேவையா என்பது தனிக்கதை)இதை எப்படி மேல் முறையீடு செய்ய முடியும் என்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே எந்த பாடத்தை படிப்பது என்று தெரியாமல் பத்தாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் படு குழப்பத்தில் இருக்கிறார்கள் , இதில் இணையத்தில் பதிவிறக்கம் செய்து இத்தனை நாட்களாக படித்து வந்தவர்களின் நிலையை சொல்லி தெரிய வேண்டாம் , இத்தனை நாட்களாய் அவர்களின் உழைப்பும் நேரமும் வீண் .

இந்த தீப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு  4 கோடி அளவில் பழைய புத்தகங்களை மீண்டும் அச்சடிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் டெண்டர் விட்டு, தற்போது பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் புத்தகங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த மேல் முறையீட்டிலும் உச்ச நீதி மன்றம் தடை வழங்குமேயானால் இந்த புத்தகங்களின் நிலை என்னவாகும் என்பதும் இந்த வீண் விரயத்திற்கு யார் பொறுப்பாவார்கள் என்பது நூறு கோடி ரூபாய் கேள்வி.

இவை அனைத்திற்கும் உச்சமாய் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அவர்களின் இன்றைய அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் படு குழப்பத்தில் தள்ளியுள்ளது அந்த அறிவிப்பு "கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 15-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்." இந்த அறிவிப்பை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை , பள்ளிகள்  ஜூன் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் ஆனால் எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், என்ன ஒரு தீர்க்கமான முடிவு. 

அரசியல் காரணங்களுக்காக அள்ளி தெளித்த கோலத்தில் எடுக்கப்பட்ட இது மாதிரியான முடிவுகள் மாணவர்களிடையே என்ன மாதிரியான பாதிப்பை உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து இருக்கிறார்களா ?? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கிறது இந்த அரசின் வறட்டு கெளரவம்.

உடனடி இட்லி , தோசை மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது மாதிரியான இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்து என்ன விதமான பாடங்கள் குறையோடிருக்கிறதோ அந்த பாடங்களை நீக்கி , இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

அதை செய்யுமா இந்த அரசு இல்லை அவர்களின் முடிவின்படியே மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடப்போகிறதா ???

0 comments:

Post a Comment