Saturday, June 25, 2011

கேஸ் ரூ.50, டீசல் ரூ.3, மண்ணெண்ணெய் ரூ.2 அதிகரிப்பு..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!


Petrol Bunk
சென்னை: சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக 50 ரூபாய் உயத்தியது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் - டீஸலின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது மத்திய அரசு. பெட்ரோல் விலையை விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நினைத்த நேரத்திலெல்லாம் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்து வருகின்றன.

ஆனால் டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இவற்றின் விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுப்பதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதாலும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படுவதாலும் அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு

இந்த நிலையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.

இனி சிலிண்டர் விலை ரூ.402

மண்ணெண்ணெயின் விலை கடந்த ஆண்டு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இப்போது லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னை நகரில் இதுவரை சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 352 ரூபாய் 35 காசாக இருந்து வந்தது. 50 ரூபாய் விலை உயர்ந்து இருப்பதால் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 402 ரூபாய் 35 காசாக அதிகரித்து விட்டது.

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

விலை உயர்வு பற்றிய தகவலை அமைச்சர்கள் குழு கூட்டம் முடிந்ததும், பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. டீசல் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 4 ரூபாய் 60 காசில் இருந்து 2 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சுங்கவரியும், உற்பத்தி வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.21 ஆயிரம் கோடி குறையும்.

டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றுக்கு பின்னரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படும்," என்றார்.


0 comments:

Post a Comment