Wednesday, February 29, 2012

இனி எங்களுக்கு அணு உலையே வேண்டாம் : ஜப்பான் அலறல் !


 டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.

ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.

பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டார்களாம்.

இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.

இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.

இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத புக்குஷிமா!

இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.

சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment