Sunday, March 25, 2012

இன்றிய மக்களின் எழுத்தாக்கம் - பணம்



நான் ஏற்றத்தாழ்வின்
அளவு மாணி!
 
மனித வாழ்வின்
உயிர் நாடியும் நானே!
 
ஏழைக்கு நான்
வெறும் கனவு மட்டுமே!
 
பலரின்
இலட்சியமும் நான் தான்
சவாலும் நான் தான்!
 
நான் சமத்துவத்தின்
இலக்கணம்..
யாசிக்கும் கரங்களையும்
நேசிப்பேன்
*"டொடடி"களின்
மடிகளையும் நிரப்புவேன்!
 
என்னில் இல்லை
உயர்வும் தாழ்வும்,
மனிதா என்னால் உன்னில்
உயர்வும் தாழ்வும் ஏன்?
 
வங்கிகள்
என் காப்பரண்கள்
நான் அடை காக்கப்படுவதும்
அங்கு தான்
அப்போது,
வட்டியை நான்
குட்டியும் இடுவேன்!
 
உலகம் உள்ள வரை
எனக்கு மரணமில்லை!
 
காலத்துக்குக் காலம்
தேசத்துக்குத் தேசம்
என் நாமமும் உருவமும்
மாறினாலும்
என் சுயம் ஓன்று தான்!
 
என்னையும் வெறுத்த
துறவிகளும் உளர்
எனக்காய் உயிர் அறுத்த
பிறவிகளும் உளர்!
 
வீட்டுக்கு வீடு
நாட்டுக்கு நாடு
என்னைத் தழுவாக்
கரங்களுமில்லை,
என் நாமம் உரைக்காத
உதடுகளுமில்லை!
 
என்னைப் பெற முடியாததால்
வாழ்வை  இழந்தோர் பலர்!
என்னை அதிகம் பெற்றதால்
நிம்மதி குலைந்தோரும் உளர்!
 
எனது பிடியில்
உலகம்!
உலகின் பிடியில்
நான்!
 
"என்னைக்கண்டால்
பிணமும் எழும்பும்"
முது மொழி
"எனக்காய் இன்று
பிணமாய் மடிவர்"
புது மொழி
 
எனக்கும் அவ்வப்போது
வீக்கம் வரும்
"பண வீக்கம்"
 
என்னில் அழுக்குப் படிந்தாலும்
என் உருவம் சிதைந்தாலும்
என்னை
நேசிப்போரும் பூசிப்போரும்
குறைவதே இல்லை!
 
சட்டைப் பை
மேசை லாச்சு
இரும்புப் பெட்டி...
இன்னுமின்னும்
என் இருப்பிடங்கள்!
 
தடம்  மாறும்  மனித வாழ்வில்
அடிக்கடி - நான்
இடம் மாறினாலும்,
நான் அகதியல்ல!
எனக்கு எவ்விடமும்
நிரந்தரமில்லை!
கண்டம் விட்டுக்
கண்டமும் பாய்வேன்
அனால்
நான் ஏவுகணையுமல்ல!
 
அவ்வப்போது
என்னைப்போல
போலிகளும் பிறக்கும்
அனால்
வாழ்வு நீர்க்குமிழி!
 
சிலருக்கு நானே
கடவுள்!
பலருக்கு நான்
வாழ்க்கை!
பலருக்கு நானே
சுவாசம்!
பலருக்கு நானே
மகிழ்ச்சி!
பலருக்கு நானே
துயரம்!
பலருக்கு நான்   தான்
பலம்!
சிலருக்கு நான் தான்
தூக்குக் கயிறு!
 
மனிதா
எனக்கு எத்தனை நாமங்களைச்
சூட்டுகின்றாய்?
வியர்வை சிந்தி
என்னை நீ ஈட்டினால்
கூலி!
ரகசியமாய்
அதிகாரியை அடைந்து
காரியமாற்றினால்
நான்- லஞ்சம்!
எதிர் பார்ப்பின்றி
என்னை வாரி வழங்கினால்
நான்- கொடை
திட்டங்களுக்கு
அரசு என்னை ஒதுக்கும் போது
நான்- நிதி!
சட்டத்துக்கு கட்டுப்பட்டு
என்னைச் செலுத்தும் போது
நான்- வரி!
வியாபாரத்தின் முடிவில்
நான்- இலாபம்!
யாசகனின் ஏனத்தில்
நான்- பிச்சை!
கடவுளின் சன்னிதானத்தில்
நான்- காணிக்கை!
இன்னுமின்னும்
எத்தனை நாமங்களை
எனக்குச் சூட்டுகின்றாய் மனிதா?
 
மனிதா
என்னைப் படைத்தது நீ!
உன்னை ஆட்டிப் படைப்பது நான் தான்!
எனவே,
என்னை அளவோடு ஈட்டு
அளவுக்கு மிஞ்சினால்
நானும் நஞ்சு தான்!
மாவனல்லை எம்.எம்.ரவூப்

--
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
”..நீங்கள் நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)
 Regards 
Ansar (U.L)

0 comments:

Post a Comment