Friday, March 23, 2012

மோசமடையும் இடிந்தகரை நிலவரம்

இடிந்தகரை: இங்கே நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே வருகிறது. தற்போது 10,000ற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பங்கெடுத்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்களும், கை குழந்தையுடன் இருக்கும் பெண்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இடிந்தகரை கிராமத்திற்கு அத்தியாவசிய பொருட்களை காவல்துறையினர் தடை செய்துவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளுக்கு தண்ணீரையே புகட்டி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள கிராமத்திலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடை பயணமாகவும், படகு மூலமாகவும் இடிந்தகரை கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். சுகாதார அதிகாரிகள் ஒருவர் கூட மக்களுக்காக உதவி செய்ய இதுவரை முன்வரவில்லை.


15ற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதால் அவர்களுடைய உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே வருகிறது. அவர்களை பரிசோதிப்பதற்கோ தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்கோ எந்த மருத்துவரும் இதுவரை வரவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமார் பத்திரிக்கையாளர்களிடத்தில் கூறும்போது "தமிழ நாளிதழ்களில் தரங்கெட்ட பத்திரிக்கையான தினமலர் நாங்கள் வயிறு நிரம்ப உணவு சாப்பிடுவதாகவும், உண்ணாவிரதம் இருப்பது போன்று நாடகமாடுவதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது.என்னுடைய வயிற்றிலோ அல்லது என்னுடைய தோழரான புஷ்பராயன் வயிற்றிலோ உணவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் இந்த போராட்டத்தை கைவிட நாங்கள் தயார். அப்படியில்லையென்றால் தங்களது முட்டாள் பத்திரிக்கையான தினமலரை நிறுத்த அவர்கள் தயாரா? நாங்கள் உயிர் வாழ்வதற்காக போராடுகிறோம். தினமலரை போன்று ஆன்மாவை விற்று பிழைக்கவில்லை" இவ்வாறு தினமலர் பத்திரிக்கையை கடுமையாக சாடினார்.

கடந்த புதன்கிழமை அன்று  எனது தாய்க்கு ஒரு போன் கால் வந்தது. யார் என்று விசாரித்தபோது வழக்கறிஞர் உதயகுமார் என்பவர் சென்னை டி.ஜி.பி அலுவல்கத்திலிருந்து பேசுவதாக கூறியிருக்கிறார். மேலும் என்னை போராட்டத்தை கைவிடச்சொல்லுமாறும் அப்படி நான் செய்து விட்டால் என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்பப்பெற்றுவிடுவார்கள் எனவும் நான் கேட்பதை எனக்கு தரவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எனது மகன் பணத்திற்காக விலை போகிறவன் கிடையாது எனக்கூறி போனை துண்டித்துவிட்டார். அன்றைய தினமே நெல்லை மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி எனக்கு போன் செய்து " நீங்கள் உடனடியாக தனியாக சரணடைந்துவிடுங்கள், இதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!" என்று கூறினார். நான் எதற்கும் தயாரகவே உள்ளேன் ஆனால் இடிந்தகரை கிராம மக்களும் என்னோடு கைது செய்யப்பட தயாராகவே இருக்கிறார்கள். என்னை அவர்கள் தனியாக அனுப்ப ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். எனவே உங்கள் தரப்பிலிருந்து எங்களை கைது செய்வதற்காக எத்தனை வாகனங்களை அனுப்ப முடியுமோ அனுப்பி வையுங்கள் நாங்கள் அனைவரும் அமைதியாக ஏறியபின் எங்களை எங்கு அழைத்துச்செல்ல நினைக்கின்றீர்களோ அங்கே எங்களை கூட்டிக்கொண்டு போகலாம் என திட்டவட்டமாக கூறினேன். இதுதான் உங்களுடன் இறுதியாக நான் பேசுவது என்று கூறி அந்த அதிகாரி போனை வைத்துவிட்டார்.

எனது மனைவி நடத்திக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினரை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. போன் செய்து அங்கிருந்து போய்விடுமாறு கூறியிருக்கிறார். அதன் பின்னர் காவல்துறையினரின் ஆசிர்வாதத்துடன் சில குண்டர்கள் அந்த பள்ளிக்கூடத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். வகுப்பில் உள்ள பெஞ்சுக்கள், லைப்ரேரி, அலுவலகம் என ஒன்றையும் விடாமல் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்திவிட்டனர்.

இந்த அரசாங்கமும், காவல்துறை அதிகாரிகளும் என்னை தீவிரவாதி என்ற தரத்திற்கு கொண்டு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த மனிததன்மையற்ற மிருகத்தனமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். மின்சாரம், குடிநீர், பால் விநியோகம் என அனைத்தையும் கடந்த 2 நாட்களாக தடுத்துவைத்திருக்கின்றனர். இடிந்தகரை கிராமத்திலிருந்து யாரும் வெளியேறமுடியாதவாறும் அதே சமயம் யாரும் கிராமத்திற்குள் வரமுடியாதவாறும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். நாங்கள் சாதாரண மனிதர்கள். நியாத்திற்காகவும் எங்களுடைய பாதுகாப்பிற்காகவும் அகிம்சை முறையிலும் ஜனநாயக ரீதியாகவும் போராடி வருகின்றோம். எங்களுடைய இந்த 8 மாத போராட்டக்காலங்களில் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த தேசமும் எங்களைக்கண்டு பெருமைகொள்கிறது.

இடிந்தகரை கிராமத்தில் இக்கட்டாண நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அணு உலை ஏற்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாரெல்லாம் நமது தேசத்தின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்கிறார்களோ, நம்முடைய இயற்க்கை வளம் பாதிப்படையக்கூடாது எனவும், அணு ஒப்பந்தத்தின் மூலமாக நமது தேசத்தின் சுதந்திர பரிபோய்விடக்கூடாது என விரும்புகின்றவர்கள் எங்களையும் எங்களது போராட்டத்தையும் ஆதரிப்பார்கள். எங்களை ஆதரிக்கின்ற அனைவர்களுக்கும் எங்களுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். காவல்துறையினர் எங்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் எங்களுடைய இந்த அகிம்சை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment