புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான கமல் சவுகானின் பயண ஆவணங்களை காணவில்லை. சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவெடிப்பை நிகழ்த்த கமல் சவுகான் 2007 பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தூரில் இருந்து டெல்லிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற பயண ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.
கமல் சவுகான் இந்தூர் ரெயில்வே ஸ்டேசனில் நிரப்பி அளித்த விண்ணப்ப படிவம், பழைய ரெயில்வே ஸ்டேசனில் ஓய்வறையை பயன்படுத்தியதை தெரிவிக்கும் ரிட்டயர் ரூம் பதிவேடு ஆகியவற்றை பரிசோதிக்க முயன்ற என்.ஐ.ஏ அவை காணாமல் போனதை கண்டறிந்துள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுகள் அடங்கிய சூட்கேசுகளுடன் தனது சக தோழர் லோகேஷ் சர்மாவுடன் ரெயிலில் தான் டெல்லிக்கு சென்றதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கமல் சவுகான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருந்தான்.
இதனைத் தொடர்ந்து சவுகானின் பயண ஆவணங்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ குழு இந்தூருக்கு சென்றது. பிப்ரவரி 18-ஆம் தேதி நிஜாமுத்தீன் ஸ்டேசனுக்கு சென்ற இருவரும் அங்கு ஓய்வறையில் தங்கியதாக சவுகான் கூறியிருந்தான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஸ்டேசனை அடையும் வரை இருவரும் ஓய்வறையில் காத்திருந்தனர். ஆனால், இருவரும் பெயரை எழுதி கையெழுத்திட்ட அன்றைய ரிட்டயரிங் ரூம் ரெஜிஸ்டரையும் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரெயில்வேயின் பதிவேடுகளில் இருந்து ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. விசாரணையில் முக்கிய ஆவணமாக கருதப்படவேண்டிய சவுகானின் கையால் எழுதப்பட்ட இந்த ஆவணங்கள், இவர் கைது செய்யப்பட்ட பிறகு வேண்டுமென்றே நீக்கம் செய்யவோ அல்லது அழிக்கவோ செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளையில், இந்த ஆவணங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்.ஐ.ஏ ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரெயில்வேயின் உதவியை என்.ஐ.ஏ நாடியுள்ளது. பொய் பெயரை உபயோகித்து பயணித்திருக்க வாய்ப்பு இருப்பதால் கையெழுத்து நிபுணர்களின் உதவியை நாடுவோம் என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
thanks to asiananban
0 comments:
Post a Comment