Saturday, March 24, 2012

வக்ஃப் வாரியத் தலைவரை உடனே நியமனம் செய்ய வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் பொருளாளர் கே.எஸ்.எம் இபுராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இச்செயற்குழுவில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய அரசு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் வக்ஃபு வாரியத் தலைவர் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இது வக்ஃப் வாரியம் மீதும் அதன் சொத்துக்கள் மீதும் அரசு கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுடன் முஸ்லிம்கள் விவகாரத்தில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது போன்று தோற்றமளிக்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் அரசியல் வாதிகளால் குறிப்பாக ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதும் அதனை ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கும் இச்செயற்குழு இது தொடர்பாக உள்துறைச் செயலர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முறையிடவும் தீர்மானித்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான சந்தேகங்களை புறந்தள்ளி விட்டு அணு உலை செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறது இச்செயற்குழு. மேலும், கூடங்களும் பகுதி மக்கள் காவல்துறையினரின் குவிப்பினால் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசு இது விஷயத்தில் கூடங்குளம் மக்களின் ஜனநாயக ரீதியிலான போராடத்திற்கு மதிப்பளித்து அங்கு நிலைமைகள் சீரடைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடங்குளம் அணு உலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்திய நகரங்களில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கும் ரூபாய் 29ம், கிராமத்தில் வாழக்கூடிய ஒருவர் ரூபாய் 22ம் சம்பாதிக்கிறார் எனில் அவர் அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்றும் அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் தான் ஏழைகள் என்றும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது மத்திய அரசின்  திட்டக்கமிஷன். இன்று பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு பலரின் தினசரி வாழ்வையே கேள்விக்குறியதாக ஆக்கி வரும் இவ்வேளையில் நீங்கள் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டாலே பணக்காரர்கள் பட்டியலில் வந்து விடுவீர்கள் எனும் கேலிக்கூத்தான அறிக்கையை வெளியிட்டு இந்திய மக்களின் மேல் மேலும் ஒரு இடியை இறக்கி உள்ளது மத்திய அரசின் திட்டக்கமிஷன்.
     திட்டக்கமிஷனின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் திட்டக் கமிஷனின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒத்துவராத இது போன்ற முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பொதுச்செயலாளர் ஏ.ஹாலித் முஹம்மது செய்தி வெளியிட்டுள்ளார்.

    0 comments:

    Post a Comment