Sunday, January 22, 2012

ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்


Abdel Aziz Dweik
டெல்அவீவ்:ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரும், ஹமாஸ் தலைவர்களில் ஒருவருமான அப்துல் அஸீஸ் துவைக்கை இஸ்ரேல் கைது செய்துள்ளது. தெற்கு மேற்கு கரை நகரமான ஹெப்ரானுக்கு செல்லும் வழியில் துவைக்கை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. இதனை அவரது உதவியாளர் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

துவைக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் தாஃபிஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவைக்கின் கண்களை துணியால் கட்டி ரகசிய இடத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கொண்டு சென்றதாக நேரடி சாட்சிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துவைக்கின் கைதை இஸ்ரேல் உறுதிச்செய்துள்ளது. துவைக்கை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும் என ஃபலஸ்தீன் கோரிக்கை விடுத்துள்ளது.
துவைக்கின் கைது அமைதிக்கான முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஜனநாயக நடைமுறைகளை பலவீனப்படுத்தும் என்றும் ஃபலஸ்தீன் பாராளுமன்ற துணைத்தலைவர் அஹ்மத் பஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ஃபத்ஹுடன் நடைப்பெற்றுவரும் நல்லிணக்க பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்காகவே இக்கைது நடவடிக்கை என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலுடன் நடத்தும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை வாபஸ் பெறுமாறு ஹமாஸ் தலைமை மஹ்மூத் அப்பாஸிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துவைக்கை 2006-ஆம் ஆண்டிலும் இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது. கிட்டத்தட்ட 20 ஃபலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment