"பாலஸ்தீன எல்லையில், இஸ்ரேல் தனது குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவது, அப்பிரச்னையை தீர்க்க சர்வதேச சமூகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வேட்டு வைக்கும். அதனால் இஸ்ரேல், தனது குடியேற்றங்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்' என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை நீடித்து வருகிறது. அதில், பாலஸ்தீன எல்லைப் பகுதிகளில், இஸ்ரேல் தனது நாட்டவர் குடியேறுவதற்காக புதிய குடியேற்றங்களை அமைத்து வருகிறது. இது பாலஸ்தீனத்தின் இறையாண்மையை மீறிய செயல் என, சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டும் இஸ்ரேல் நிறுத்தவில்லை. இதுகுறித்து நேற்று ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் நடந்த விவாதத்தின் போது பேசிய இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: பாலஸ்தீன மண்ணில் புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் உருவாக்குவது, இரு நாடுகள் தீர்வுக்கு வேட்டு வைக்கும். இப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா., மற்றும் ரஷ்யா தூதர்கள் முயன்று வருகின்றனர். இந்தாண்டின் இறுதிக்குள், இதற்கான ஓர் ஒப்பந்தத்தை அந்த தூதர்கள் உருவாக்குவதற்கு வசதியாக, தனது புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச சட்டப்படி இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை. காசா நிலப் பகுதிக்கான இறக்குமதிகள் மீதான தடைகளை தளர்த்தி, மனிதாபிமான உதவிகள் அங்கு போய்ச் சேருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ஐ.நா.,வில் உறுப்பினர் ஆவதற்கு பாலஸ்தீனத்திற்கு அனைத்துத் தகுதிகளும் இருக்கின்றன என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு புரி தெரிவித்தார்.
thanks to gnanamuthu.com
0 comments:
Post a Comment