Saturday, January 14, 2012

இந்தியா ஏற்கனவே உடைந்துவிட்டது. அருந்ததிராய்

 உடைந்த குடியரசு’. தேசத்தின் மனசாட்சியாகத் திகழும் அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இது. காலச்சுவடு பதிப்பகம் சார்பில் வெளியாகி இருக்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.



''இந்தியா உடைந்துவிடும் என்று முடிவே செய்து விட்டீர்களா?''



''இந்தியா ஏற்கெனவே உடைந்துவிட்டது. இந்தியர்கள் எல்லோருமே மனதளவில் உடைந்து, பிரிந்துதான் நிற்கிறார்கள். இங்கு யாருக்குமே மற்றவர்களின் பிரச்னைகளில் கவலை இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பேசுபவர்கள் காஷ்மீர்பற்றிப் பேசுவது இல்லை. தண்டகாரண்யக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவர் கள் கூடங்குள மக்களுக்காகக் குரல் கொடுப்பது இல்லை. இதற்கு முக்கியக் காரணம், இங்கு ஒவ்வொருவரும் அவரவர் பிரச்னையை மட்டுமே முக்கியமானதாகக் கருதுவதுதான். ஒரு வகையில், இந்தப் பிரிவுக்கு அரசுதான் காரணம். என்னைக் கேட்டால், இந்தியாவின் மிகப் பெரிய பிரிவினைவாத இயக்கம் இந்தியாவை ஆளும் அரசாங்கம்தான்!''



''ஒருபுறம் அரசாங்கத்தைப் பிரிவினைவாத இயக்கம் என்கிறீர்கள். மறுபுறம் மாவோயிஸ்ட்டுகளைக் காந்தியவாதிகள், தேச பக்தர்கள் என்கிறீர்கள்?''



''நக்சலைட்டுகள் இயற்கையோடு ஒட்டி வாழ்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளைக்கூட அவர்கள் மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார் கள். காந்தியின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்ற கோட் பாட்டை இன்றைக்கு ஓரள வேனும் பின்பற்றுவது நக்ச லைட்டுகள்தான் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந் தேன். அதைத்தான் நீங்கள் குறிப்பிடுவதுபோலச் சிலர் திரித்துவிட்டனர். பயங்கர வாதத்தை ஒருபோதும் நான் நியாயப்படுத்தியது இல்லை.



ஆனால், நக்சலைட்டுகள் பக்கமும் நியாயம் இருப்பதை நான் பேசினேன். நீங்கள் நக்சலைட்டுகள் என்று குறிப்பிடும் தண்டகாரண்யப் பகுதியில் ஆயுதங்களைத் தூக்கிப் போராடும் போராளிகள் உண்மையில் யார்? அவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் ஆதிவாசிகள். பழங்குடிகள். அந்த மண்ணின் பூர்வக் குடிகள். அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள்? தங்கள் நிலத்துக்காக மட்டும் அல்ல... இந்த தேசத்தின் அரிய சொத்துக் களான கனிம வளங்களைக் காக்கப் போராடுகிறார்கள்.



நீங்கள் இது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் அரசு என்று குறிப்பிடும் அமைப்பு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களிடம் தேசத்தின் சொத்துக்களைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறது. நாம் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுபவர்களோ அதைக் காக்கப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் யாருடைய நியாயத்தை நான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய போராட்டத்தின் நோக்கம் நியாயமானது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.''



''மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் பாதையை நீங்கள் ஏற்கவில்லை சரி. ஆனால், அண்ணா ஹஜாரே வின் இயக்கத்தையும் நீங்கள் நிராகரிக்கிறீர் களே?''



''அண்ணா ஹஜாரே குழு எப்போது தலை எடுத்தது? இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் இரண்டாம் தலை முறை ஊழலை மிகப் பெரிய பிரச்னை யாகப் பார்க்க ஆரம்பித்த தருணத்தில், மன்மோகன் அரசை எல்லா இயக் கங்களும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்த தருணத்தில்தான் உருவெடுத்தார் ஹஜாரே. சரியாகச் சொன்னால், மக்களின் வெறுப்பைச் சரியான தருணத்தில் திசை திருப்பினார் ஹஜாரே.



வெறும் சட்டங்களால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியுமா? அது ஒரு போலி நம்பிக்கை. சம கால இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் - பெரு நிறுவனங்கள். இரண்டாம் அலைக்கற்றை ஊழல் உட்பட, இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்களில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.



அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாத ஹஜாரே குழு, இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய முழு ஆதரவுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் ஹஜாரே குழு - ஊழலை ஒழிக்கும் என நம்புவது மிகப் பெரிய மடத்தனம்!''



''எதையுமே அவ நம்பிக்கையுடன் பார்க் கிறீர்கள்... மக்களுக்கு என்ன வழிதான் இருக்கிறது? நீங்கள் ஓர் அவநம்பிக்கைவாதியா?''



''இதை நான் ஆட்சேபிக்கிறேன். எங்கெல்லாம் மக்கள் நியாயத்துக்காகப் போராடுகிறார்களோ... அங்கெல்லாம் - குறிப்பாக யாரெல்லாம் புறக்கணிப்புகளோடு போராடுகிறார்களோ அங்கெல்லாம் நான் கை கோத்து இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.''



''தமிழகத்தில் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் அலை எழுந்தது. ஆனால், தேசிய அளவில் பல அறிவுஜீவிகள் இந்தப் போராட்டம் தொடர்பாக வாயே திறக்க வில்லை. நீங்கள் உட்பட?''



''மனிதனை மனிதனே கொல்லும் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக நான் எப்போதுமே குரல் கொடுத்துவருகிறேன். ஒரு நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனை அவமானகரமான ஒரு செயல்பாடு. தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட அமைப் பின் மூலமாகக் கொலை செய்கிறார்கள். ஆனால், தூக்குத் தண்டனை நம் மக்களின் பெயரால் அரசாங்கம் செய்யும் கொலை. அரசாங்கமும் கொலைகாரர்களும் ஒன்றா? தூக்குத் தண்டனை கண்டிப்பாகக் கூடாது... அது யாருக்காக இருந்தா லும் சரிஎன்பதே என் நிலைப்பாடு.



அதே சமயம், நான் வாயை மூடிக்கொண்டு இல்லை. நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் பெரும்பான்மையினரால் பொருட்படுத்தப்படாத வட கிழக்கு மாநில மக்கள் போராட் டங்களில் நான் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன்.''



''புகுஷிமாவுக்குப் பிந்தைய சூழலில், அணு சக்தி தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு சரியா? குறிப்பாக, கூடங்குளம் விவகாரத்தில்?''



''ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டபோது நான் அங்கேதான் இருந்தேன். இந்த நில நடுக்கம், சுனாமி, அணு உலை விபத்துக் களால் ஜப்பான் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இழப்புகள் சொல்லி மாளாதவை. மிகக் கொடுமையானவை. ஆனால், பல விஷயங்களை ஜப்பானிய அரசு மறைத்துவிட்டது. நமக்கு இங்கு தெரியும் தகவல்கள் ரொம்பவும் குறைவானவை என்பதே உண்மை.



புகுஷிமா விபத்துக்குப் பிறகு, பல நாடுகள் தங்கள் அணு மின் திட்டங்களை நிறுத்திவிட்டன. அணு சக்திப் பயன்பாடு குறித்தே மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. நம்முடைய அரசுதான் எந்த உறுத்தலும் இல்லாமல் இன்னும் பல அணு மின் நிலையங்களைத் திறக்க உள்ளது. அரசியல் கட்சிகளும் இதில் இரட்டை வேடம் போடுகின்றன.



ஒரு சாதாரண பிளாஸ்டிக் குப்பையைக்கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத இந்த அரசாங்கம், அணு உலைகளைப் பராமரித்து, கழிவுகளைப் பத்திரமாக வெளியேற்றப்போவதாகக் கூறுவது நகைப்புக்கு உரியது.''



''காவிரியைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர் கள்?''



''இரு மாநில மக்கள் இடையே கொந்தளிப்பான உணர்ச்சி கள் நிலவும் இந்தச் சூழலில், நான் என்ன சொன்னாலும் அது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். அதனால், இப்போது இதுபற்றி நான் பேச விரும்ப வில்லை.''



''சரி, உடைந்துகொண்டு இருக்கும் இந்தியாவை எப்படித்தான் காப்பது?''



''மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமாயின், மக்கள் தாங்களே ஒன்றிணைந்து போராட வேண்டும். பெரிய தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருப்பது உதவாது. கூடங்குளம் மக்களின் போராட்டம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்!''







as
thanks to thedipaar.com




0 comments:

Post a Comment