Saturday, January 14, 2012

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இனிமேல் கட்டுரைகள் எழுதமாட்டேன் - சுவாமி


பத்திரிகை ஒன்றில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு இந்த மாதம் 30-ம் தேதி வரை, டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான சுவாமியின் கட்டுரை, மத துவேஷத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதுதொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.


எதிர்காலத்தில் இதுபோன்ற கட்டுரைகளை எழுத மாட்டேன் என சுப்ரமணியன் சுவாமி அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி மேதா உத்தரவிட்டார்.


முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுவாமியின் மனு மீதான விசாரணை நடந்தபோது, மதச்சார்பற்ற இந்த நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மதிக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து வெளியிட்டார்.


பிரிட்டனைப் போல, இந்தியா ஐரோப்பிய நாடு அல்ல. இங்கு பல்வேறு வகையான கலாசாரங்கள் இருக்கின்றன. அதற்காகப் பெருமைப்பட வேண்டும் என்றார் நீதிபதி.


நீங்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் மேலும் கட்டுரைகள் எழுத மாட்டேன் என்று நீங்கள் உத்தரவாதம் அளித்தால், உங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்றார் நீதிபதி.


முன்னதாக, சுவாமியின் வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி வாதிடும்போது, இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை முறைகேட்டை சுவாமி அம்பலப்படுத்தியதால்தான், அவரைத் துன்புறுத்தும் வகையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.


கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் சுவாமி கட்டுரை எழுதினார்.


அதன்பிறகு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை அம்பலப்படுத்தியபிறகு திடீரென சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் வழக்கறிஞர் துளசி குறிப்பிட்டார்.
thanks to yarlmuslim and inneram.com

0 comments:

Post a Comment