கெய்ரோ:ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி ஜனநாயக புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்ட பிறகு எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 47 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிந்தனைக் கொண்ட ஸலஃபிகளின் அந்நூர் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிந்தனைக் கொண்ட ஸலஃபிகளின் அந்நூர் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையில் 508 உறுப்பினர்களை கொண்ட மக்கள் அவைக்கு மூன்று கட்டமாக தேர்தல்கள் கடந்த ஒன்றை மாத காலமாக நடந்தது. இதில் 10 உறுப்பினர்களை ராணுவம் முன்மொழியும். எகிப்தின் மிகவும் சிக்கலான தேர்தல் நடைமுறையின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பகுதி கட்சி வேட்பாளர்களுக்கும், மீதமுள்ளவை தனி வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றில் இரண்டு பகுதி இடங்களிலும் இஸ்லாமிய கட்சிகள் வெற்றிப் பெற்றுள்ளன.
235 இடங்களில் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் தலைமை கமிஷனர் அப்துல் அஸீஸ் இப்ராஹீம் அறிவித்துள்ளார். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் 127 பேரும், தனி நபர் வேட்பாளர்களில் 108 பேரும் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அல் நூர் கட்சிக்கு 24 சதவீத இடங்கள் கிடைத்துள்ளன. தாராளமய கொள்கையை கொண்ட வஃப்த் கட்சிக்கு ஏழு சதவீத இடங்கள் கிடைத்துள்ளன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறும். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான 100 உறுப்பினர்களை தேர்வுச்செய்வது அவையின் முதல் முக்கிய பணியாகும்.
சபாநாயகராக டாக்டர்.முஹம்மத் ஸஅத் கதாதினியை பரிந்துரைப்போம் என ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி அறிவித்துள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் சுயேட்சை உறுப்பினராக இருந்தார் கதாதினி. இவர் தாவரவியல் துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார். கலைத்துறையில் இஸ்லாமிய கல்வி அடிப்படையிலான இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மினியா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையான மைக்ரோ பயாலஜியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தற்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள ஜூன் மாதத்தில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெறும். பாராளுமன்றத்தின் துணைச் சபையான ஷூரா கவுன்சிலின் 270 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெறும்.
thanks to asiananban.blogspot.com
0 comments:
Post a Comment